சென்னை அருகே லஞ்சம் கேட்டதாக போக்குவரத்து காவலரை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முற்றுகையிட்டு சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் 4 போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவரை பிடித்த போலீசார், அவரிடம் 100 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இளைஞர் பணத்தை தர மறுத்துள்ளார். இதில் கோபமடைந்த போலீசார் அந்த இளைஞரை தாக்கியுள்ளனர்.
போலீசார் தாக்குவதை கண்ட வாகன ஓட்டிகள் கடும் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து போக்குவரத்து போலீசாரை முற்றுகையிட்டனர். அப்போது போக்குவரத்து ஆய்வாளரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினர். லஞ்சம் தராவிட்டால் பொதுமக்களை அடிக்கலாமா? சம்பளம் வாங்காமலா பணிசெய்கிறீர்கள்? அரசு சம்பளம் வாங்குகிறீர்கள். பின்னர் எதற்கு லஞ்சம் கேட்கிறீர்கள்? பொதுமக்கள் என்ன முட்டாலா? என சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
பொதுமக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய போலீசார், இதனை கண்டுகொள்ளாமல் மெளனம் காத்தனர். மேலும் கூட்டம் சேராமல் மக்களை அப்புறப்படுத்துவதிலே தீவிர முனைப்பு காட்டினர். ஆனால் விடாத பொதுமக்கள் லஞ்சம் கேட்டு தாக்கிய காவல் ஆய்வாளரை பிடித்து கையை கட்டி வீடியோ, எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் சக காவல் ஆய்வாளர்கள் வீடியோ எடுக்கவிடாமல் தடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.