Skip to main content

“பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை..” அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 18/05/2021 | Edited on 18/05/2021

 

"The public need not fear." Paneer Selvam

 

சிதம்பரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசின் கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ரூ2 ஆயிரம் கரோனா நிவாரண நிதியை வழங்கினார். இதனை தொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் கரோனாவை  கட்டுப்படுத்துவது குறித்து தமிழக வேளாண்துறை அமைச்சர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அருண் சத்தியா, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், வட்டாட்சியர் ஆனந்த், டி.எஸ்.பி. லாமேக், நகராட்சி ஆணையர் அஜிதாபர்வீன், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வர் மிஸ்ரா, கண்காணிப்பாளர் நிர்மலா உள்ளிட்ட வருவாய்த் துறையினர் காவல் துறையினர் கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

இதில் அமைச்சர், இதுவரை நடைபெற்ற கரொனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  மேலும், சிதம்பரம் உள்ளிட்ட பகுதியில் கரோனாவிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க எவ்வாறு பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதே நேரத்தில், கரோனா தொற்றில் உயிரிழந்தவர்கள் குறித்தும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்.  

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 4 மாதத்திற்கு முன்பு அதிமுக அரசு கரோனாவை அலட்சியமாக விட்டதால் தற்போது கரோனா தொற்று மிக அதிகமாக உள்ளது.  இந்த அரசு பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து பொது மக்களைப் பாதுகாத்து வருகிறது.  பதவியேற்று 10 நாட்களே ஆன நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற பல்வேறு திட்டப் பணிகளைச் செய்து வருகிறார். பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை.  பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அதேபோல் கிராமப்புறங்களில் மருத்துவத் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனக் கூறினார்.


 

 

சார்ந்த செய்திகள்