அரசு ஊழியர்களுக்கும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் இடையேயான ஈகோ யுத்தம் கடந்த இரண்டு மாதமாக நீடிக்கிறது. அதன் உச்சமாக கடந்த மார்ச் 21ந் தேதி, கலெக்டரை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டம் நடத்தியது. போராட்டத்தின்போது, அரசு ஊழியர்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி ஆட்சியர் அறையை முற்றுகையிட சென்றனர்.
அப்போது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தினை அரசு ஊழியர்கள் அடித்து உடைத்துவிட்டனர். இதில் லாவண்யா என்கிற ஊழியர் காயம்பட்டார். இதுப்பற்றி காவல்துறையில் புகாரில் தரப்பட்டது. போராட்டத்துக்கு அனுமதிவாங்கிய, கண்ணாடியை அடித்து உடைத்த அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பயந்துப்போன அரசு ஊழியர்கள், கலெக்டருடன் சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அரசு ஊழியர்கள் – கலெக்டர் இடையிலான பனிப்போர் ஒரு முடிவுக்கு மார்ச் 25ந்தேதியே வந்துவிட்டது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் பொது அமைதிக்கான மக்கள் கூட்டமைப்பு என்கிற பெயரில் சில பொது இயக்கங்கள் இணைந்து, ஊழல், அரசு ஊழியர்களின் அத்துமீறல், அராஜகம், வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஏப்ரல் 9ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை வாய்மொழி உத்தரவு தந்துயிருந்தது. 200க்கும் அதிகமான பெண்கள் மற்றும் 50க்கும் அதிகமான ஆண்கள் கலந்துக்கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள், சாதாரண சின்ன விஷயத்துக்காக கூட அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் ஒரு சின்ன வேலைக்கூட பொதுமக்களால் முடிக்க முடியவில்லை.
சங்க நிர்வாகிகள் என்கிற பெயரில் ஓழுங்காக வேலை செய்வதில்லை, தனக்கு ஜால்ரா அடிக்கும் ஊழியர்களுக்கு நன்றாக லஞ்சம் வாங்ககூடிய பதவியில் இடமாற்றம் மூலம் அமரவைப்பது, நியாயமான அரசு ஊழியர்களை ஒதுக்கிவைப்பது, சங்க நிர்வாகிகளின் நியாயமற்ற கோரிக்கைக்கு அடிப்பணியாத மாவட்ட அதிகாரிகளை சங்கத்தின் பெயரை பயன்படுத்தி மிரட்டுகின்றனர். அப்படித்தான் கலெக்டரை மிரட்டியுள்ளார்கள். இது தவறுயென வரமறுக்கும் அரசு ஊழியர்கள் சிலரையும் கலந்துக்கொள்ள வேண்டும் என மிரட்டியுள்ளார்கள். அரசு ஊழியர் சங்கத்தின் பெயரை வைத்துக்கொண்டு மக்களுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடுபவர்களை கண்டிக்கவே இந்த கூட்டம் என பேசினார்கள்.
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் விஜயகுமார், கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு வாய்மொழி அனுமதி தந்தோம், அதை இப்போது கேன்சல் செய்துவிட்டோம், அதனால் உடனே ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்துவிட்டு கலைந்து செல்ல வேண்டும். இல்லையென்றால் கைது செய்வோம் எனச்சொல்ல போராட்டத்தில் ஈடுப்பாட்டவர்கள் கோபமாவிட்டார்கள். ரத்து என்பதை எழுதி தாங்கள் என போராட்டக்குழு கேள்வி கேட்க பின் வாங்கியது போலிஸ். அதன்பின் கலெக்டர் உங்களை அழைக்கிறார் போய் பேசிவிட்டு வாருங்கள் என்றதால் அவரைப்போய் சந்தித்தனர். பேச்சுவார்த்தைக்கு பின் வெளியே வந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுப்பற்றி தமிழக மக்கள் புரட்சிக்கழக தலைவர் அரங்க.குணசேகரன் செய்தியாளர்களிடம், கலெக்டர் போராட்டம் வேண்டாம் எதுவாக இருந்தாலும் என்னிடம் மனுவாக தாருங்கள் என்றார். நாங்கள் தருகிறோம் பிரச்சனையை தீர்க்கவில்லையென்றால் போராட்டம் நடத்துவோம் எனக்கூறிவிட்டு வந்துள்ளோம் என்றார்.
பொதுவாக ஒரு குறிப்பிட்ட அதிகாரியை கண்டித்து இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தும், நோட்டீஸ் அச்சடிக்கும். திருவண்ணாமலையில் ஊழலில் திளைக்கும் அரசு ஊழியர்களை கண்டித்து பொது இயக்கங்கள் போராட்டங்கள் இணைந்து பொதுமக்களை திரட்டி நடத்துவது அரசு ஊழியர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.