புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய 2017 பிப்ரவரி 15 ந் தேதி மாலை ஒப்புதல் அளித்த நிலையில் 16 ந் தேதி காலை திட்டத்தைக் கைவிடக் கோரி அங்குள்ள கடைவீதியில் விவசாயிகள் 100 பேர் திரண்டு அடையாள ஆர்ப்பாட்டம் செய்து கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். அதன் பிறகு இது தொடர் போராட்டமாக மாறியது. நாடியம்மன் கோயில் ஆலமரத்திடல் போராட்டக் களமானது. அதுவரை போராட்டம் என்றால் மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது தான் வழக்கம். ஆனால் நெடுவாசலில் அப்படியே தலைகீழாக மாறி, போராட்டம் என்பது கலைத் திருவிழா போல நடந்தது.
ஆட்டம், பாட்டம், கலை நிகழ்ச்சிகள், அரசியல் தலைவர்களின் உரைவீச்சு, சினிமா நட்சத்திரங்கள் எனப் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. போராட்டக்களத்திற்கு வந்தவர்களை இருகரம் கூப்பி வரவேற்று அவர்களுக்கு உணவளித்து உபசரித்தார்கள் போராட்டக் குழுவினர். தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி போராட்டம் செய்தாலும் இந்த நூற்றாண்டில் நடந்த முக்கியமான அமைதி வழி போராட்டங்களில் ஒன்றாக மாறியது. இந்த போராட்டத்தின் நினைவாக நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் நெடுவாசல் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது பற்றி அவர் கூறும் போது, "நெடுவாசல் கிராமத்தில் வரலாறு காணாத போராட்டத்தைச் சுதந்திரத்திற்குப் பிறகு இப்பகுதி விவசாயிகள் காந்திய வழியில் நடத்தி உலகத்தின் பார்வையைத் திருப்பி உள்ளனர். எதிர்காலத்தில் இனி விவசாயிகள் வாழ்க்கையே போராட்டமாக மாறி வருகிறது. எனவே நெடுவாசல் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் என்பதால், எதிர்கால சந்ததியினருக்கு இப்போராட்டத்தை நினைவு கூறும் வகையில் நெடுவாசல் கிராமத்தில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என நான் கேட்டுக் கொண்டுள்ளேன். விரைவில் அமைப்பதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்" என்றார்.