வேலூர் மாவட்டம் வாலாஜா வட்டம், அனந்தலை கிராமத்தில் கல்குவாரிகளில் வெடிவைத்து பாறைகளை உடைப்பதால் அனந்தலை கிராமத்தில் உள்ள வீடுகளில் வெடிச் சத்தங்கள் அதிகமாகி வீடுகள் விரிசல் அடைந்துள்ளது. அனுமதி பெற்று சில குவாரிகள் செயல்பட்டால், அனுமதி பெறாமல் அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்துவிட்டு சட்டத்துக்கு விரோதமாக அனுமதி இல்லாமல் பல கல்குவாரிகள் அனந்தலை கிராமம் சுற்றுப்புறத்தில் நடைபெற்றுவருகிறது.
தங்களது வீடுகள், நிலங்கள் பாதிக்கப்படுவது, தங்களது வாழ்வாதாரம் கேள்வி குறியாவதை அந்த கிராம மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் கல்குவாரிகளையும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து அக்கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் அக்டோபர் 15ந்தேதி குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்துள்ளனர் அதிகாரிகள்.
இதனால் அதிருப்தியான அனந்தலை கிராம மக்கள், அக்டோபர் 15ந்தேதி கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தை செய்தனர். அதோடு, கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ், சிப்பந்தி வடிவேலை அலுவலகத்திற்குள் உள்ளே வைத்து பூட்டினர். இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியான காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி முற்றுகைப் போராட்டத்தை கைவிடுமாறு வற்புறுத்தியுள்ளனர். கண்டிப்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளீர்கள் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பார் என கிராம நிர்வாக அலுவலர் கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன்பின் அலுவலகத்திற்குள் இருந்த அவர்களை மீட்டனர்.
இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக புகார் தர அது வழக்காக பதிவு செய்யப்பட்டு, அவர்கள் யார், யார் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அக்கிராம மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.