Skip to main content

நண்பர்கள் மற்றும் மக்களின் கண்ணீர்க் கடலில் விடைபெற்றார் பிரியா 

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

Priya's body was buried

 

கால் அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை எடுத்து வந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா. இவருக்கு ஏற்கனவே பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு உணர்விழப்பு காரணமாக கடந்த எட்டாம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடைய வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

 

அதனையடுத்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த பிரியா உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக இன்று (15.11.2022) காலை சரியாக 7.15 மணிக்கு உயிரிழந்ததார். தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பிரியாவிற்கு இந்த நிலை ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் கவனக்குறைவாக இருந்த மருத்துவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

இந்நிலையில் இளம் கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடல் சென்னை வியாசர்பாடியில் அவரது இல்லத்தில் இருந்து  அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு வீராங்கனை பிரியாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். வீராங்கனை பிரியா வாங்கிய கோப்பைகள் மெடல்கள் போன்றவற்றை அவரது உடல் மீது வைத்து அவரது நண்பர்கள் சக மாணவர்கள் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

 

இதன் பின் வீராங்கனை பிரியாவின் உடல் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பிரியாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் அவரது உடலுடன் கால்பந்தும், ஷூக்களும், விருப்பட்டு வாங்கிய ஜெர்சியும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்