உடன்பாட்டின்படி பணம் தர மறுக்கும் தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டித்து கருப்புக் கொடி
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் வெளியிட்டுள்ள
அறிக்கையில்,
கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பாக்கித் தொகையை மாநில அரசு பெற்றுத்தரக் கோரி கரும்பு விவசாயிகள் சென்னையிலும், சர்க்கரை ஆலைகள் முன்பும் போராட்டங்களை நடத்தினோம். தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு. எம்.சி.சம்பத் மற்றும் சர்க்கரை துறை அதிகாரிகள் முன்னிலையில் 13.10.2017 அன்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்தை நடத்தினோம்.
பேச்சுவார்த்தையில் 24 தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக தரவேண்டிய கரும்பு நிலுவை தொகை 1384 கோடியில் 2016-17ல் கரும்பு நிலுவை தொகையில் டன்னுக்கு ரூ.125 வீதம் தீபாவளி பண்டிகைக்கு முன்பு தருவது, இதன் மூலம் 110 கோடி ரூபாய் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும், மீதமுள்ள கரும்பு பண பாக்கி குறித்து முத்தரப்பு கூட்டம் நடத்தி பேசி தீர்வு காணுவது என ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் தனியார் சர்க்கரை ஆலைகள் ஒப்புக்கொண்டபடி இதுவரை விவசாயிகளுக்கு பணத்தை தரவில்லை.
தீபாவளி பண்டிகைக்கு பணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த கரும்பு விவசாயிகளை தனியார் சர்க்கரை ஆலைகள் ஏமாற்றிவிட்டன இதை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்களின் போக்கை கண்டித்து ஆலை வாயிலில் கரும்பு விவசாயிகள் கருப்பு கொடி கட்டி கண்டனம் தெரிவிக்க வேண்டுகிறோம். வாக்குறுதி அளித்தபடி தனியார் சர்க்கரை ஆலைகளிடம் தீபாவளிக்கு முன்பு பணத்தை பெற்றுத்தர மாநில அரசு தவறிவிட்டது. தனியார் ஆலைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பாக்கிப் பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று மாநில அரசை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.