Skip to main content

தனியார் பள்ளியா? அரசுப் பள்ளியா? -அதிர வைக்கும் மாணவர் சேர்க்கை புள்ளி விபரம்!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

SCHOOL

 

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் சேர்க்கை என்பது அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் தான் அதிகம் நடைபெறுவது வழக்கம். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கவே விரும்புவர். அதற்காக எவ்வளவு செலவானாலும் கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் சேர்த்து வந்தனர். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் கூலி வேலை செய்பவர்கள் கூட அவர்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் மோகம் இருந்தது. ஆனால் இந்த வருடம் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

இந்த வைரஸ் தாக்கம் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலருக்கும் வேலை வாய்ப்பு பறிபோனது. நடுத்தர வர்க்கத்தினர், தினக் கூலி வேலை செய்பவர்கள் தான் இந்த ஊரடங்கு என்கிற பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நிலையான வருமானம் இன்றி குடும்பத்தை நடத்தவே மிகவும் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் வேலை வாய்ப்பும் முழுமையான வருமானமும் இல்லை. இதனால் 80 சதவீத மக்களுக்கு நிரந்தர வருவாய் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

முன்புபோல் அவர்களால் மாத அல்லது வார சம்பளம் வாங்க முடியவில்லை. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அடித்தட்டு மக்கள் அன்றாடக் குடும்பச் செலவுகளுக்கே பெரிதும் சிரமப்படுகின்றனர். கிடைப்பதை வைத்தும், கடன் வாங்கியும் சிக்கனமாகக் குடும்பம் நடத்த வேண்டிய பரிதாப நிலையில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட கொடுமையான காலகட்டத்தில் பிள்ளைகளை, எப்படித் தனியார் பள்ளிகளில் படிக்கவைக்க முடியும்? ஆகவே தங்கள் பிள்ளைகளை இவ்வருடம் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

இப்போது ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்புகளுக்கு அரசுப் பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சென்ற 17.08.2020 -ஆம் முதல் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறுகிறது. இதைப்போன்றே எல்.கே.ஜி, யு.கே.ஜி, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளியில் சேர்ந்து வருகின்றனர். இந்த வருடம் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் அதிகமாகச் சேர்த்து வருகிறார்கள். தனியார் பள்ளிகளில் சேர்க்கை எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.

 

Ad

 

உதாரணத்திற்கு, ஈரோடு மாவட்ட புள்ளி விபரப்படி, ஒன்றாம் வகுப்பில் கடந்த 17.08.2020 முதல் 10.09.2020 வரை மொத்தம் 9,162 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் அரசுப் பள்ளியில் மட்டும் 7,724 மாணவர்களும், அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 1,048 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். ஆனால், தனியார் பள்ளிகளில் வெறும் 390 மாணவர்கள் மட்டுமே இந்த காலகட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

இதேபோல் ஆறாம் வகுப்பில், மொத்தம் 10,310 மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள். இதில் அரசுப் பள்ளியில் 7,338 மாணவர்களும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2,360 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். ஆனால், அதேநேரத்தில் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், அதிகபட்சமாக 612 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதேபோல் ஒன்பதாம் வகுப்பில் இதே காலகட்டத்தில் மொத்தம் 4,460 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் அரசுப் பள்ளிகளில் 3,641 மாணவர்களும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 600 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். ஆனால், தனியார் பள்ளியில் மொத்தமே 219 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதைப் போலவே, எல்.கே.ஜி, யு.கே.ஜி மற்ற வகுப்புகளிலும் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர்.

 

இதுகுறித்து அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறும்போது, "இந்த கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மத்திய மாநில அரசுகளால் போடப்பட்ட ஊரடங்கு பொது முடக்கத்தால் தொழிலும், மக்களின் உழைப்பும் முடக்கப்பட்டதால் வருமானத்திற்கு வழி இல்லாமல் போய்விட்டது. இதனால் ஒவ்வொரு குழந்தையின் பெற்றோர்களின் வாழ்வியல் நிலையே சீர்குலைந்து விட்டது.  முன்புபோல் பணப்புழக்கம் இல்லை. எனவே முன்புபோல் செலவும் செய்யவும் முடியாது. இதன் காரணமாகத் தான் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துவருகிறார்கள்.

 

Nakkheeran

 

அது மட்டுமில்லாமல் இந்த வருடம் பெரும்பாலும் பள்ளிகள் நடைபெற வாய்ப்பிருக்குமா எனத் தெரியவில்லை. தனியார் பள்ளியில் தொடர்ந்து அதே கட்டணம்தான். ஏற்கனவே வறுமையும், எந்தவித வருமானமும் இல்லாமல் இருக்கும் மக்கள் என்ன செய்வார்கள்? இந்த வருடம் ஏராளமான பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் குழந்தைகளின் டி.சி.க்களை பெற்று அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள். இந்தக் கரோனா வைரஸ் பொருளாதார நிலை மட்டுமல்லாமல் மக்கள் உணர்வுகள் மற்றும் மனநிலையையும் மாற்றியுள்ளது" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்