Skip to main content

கரோனா நிவாரணத்திற்காக ரூ. 3 கோடி பொருட்களை வழங்கிய மார்டின் குழுமம்..! 

Published on 18/05/2021 | Edited on 18/05/2021

 

  Martin Group donates Rs 3 crore to relief items

 

இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவிவருகிறது. தமிழகத்திலும் கரோனாவின் பாதிப்பு அதிகளவில் இருந்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதேபோல், கரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களால் முடிந்த நிதியை அனுப்பிவைக்கலாம், யார் எவ்வளவு நிதி உதவி செய்தார்கள் என்பதும், அதன் செலவு விவரங்களும் வெளிப்படையாக இருக்கும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கரோனா நிதி வந்துகொண்டிருக்கிறது. 

 

இந்நிலையில், லாட்டரி தொழிலதிபர் மார்டின் சார்பாகவும், மார்டின் குழுமம் சார்பாகவும் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள உயிர் காக்கும் உபகரணங்களை அக்குழுமத்தின் அறங்காவலர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். மேலும் அவருடன், மார்டின் குழுமத்தின் இயக்குநர் டெய்சி மார்டின், செயல் அலுவலர் ஜார்ஜ் மார்ஷல் ஆகியோர் உடனிருந்தனர். 

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்குழுமத்தின் செயல் அலுவலர் ஜார்ஜ் மார்ஷல், “ரூபாய் மூன்று கோடி மதிப்புள்ள கோவிட் தடுப்பு உபகரணங்களை வாங்கிக்கொடுத்திருக்கிறோம். 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 400 ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர்காக்கும் மருந்துகள், முகக் கவசம் உள்ளிட்டவற்றைக் கொடுத்திருக்கிறோம். இந்தக் கடுமையான சூழ்நிலையில் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள கட்டுபாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும். தமிழக மக்களுக்கு எங்களால் ஆன உதவிகளைத் தொடர்ந்து செய்வோம்” என்று தெரிவித்தார். இக்குழுமம் ஏற்கனவே கஜா புயல் ஏற்பட்டபோது, ரூ. 5 கோடி நிவாரணம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்