
கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பட்டம்பாக்கம் என்ற இடத்தில் நேற்று (19.06.2023) காலை 10 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டிக்கு சுகம் என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்து பட்டம்பாக்கம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது பண்ருட்டியில் இருந்து துர்கா என்ற தனியார் பேருந்து அதிவேகமாக வந்துள்ளது. அப்பொழுது துர்கா என்ற பேருந்தில் உள்ள டயர் வெடித்ததில் பேருந்து வலதுபுறம் இழுத்துச் செல்ல, கடலூரில் இருந்து வந்த பேருந்தின் மீது நேர் எதிராக அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் இரு பேருந்துகளின் முன் பகுதி மிகக் கோரமாக நசுங்கியது. இதில் சுகம் பேருந்து ஓட்டுநர் முருகன், துர்கா பேருந்து ஓட்டுநர் அங்காளமணி மற்றும் பேருந்தில் பயணம் செய்த தனபால், சீனிவாசன் ஆகியோர் பலத்த காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் புதுவை அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மல்லிகா என்ற பெண் உயிரிழந்தார்.
இந்த கோர விபத்தில் 80 பேர் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு அறிவித்த ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலைகளை அமைச்சர்கள் வழங்கினர். பின்னர் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் படுகாயம் அடைந்து புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களையும் அமைச்சர்கள் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.