Skip to main content

அரசுப் பணியை உதறிவிட்டு முழுநேர சமூக சேவை - பிரம்மிக்க வைக்கும் பிரிதிவிராஜ்

Published on 01/05/2023 | Edited on 01/05/2023

 

கடந்த வாரம், தூத்துக்குடி மாவட்டம் - ஸ்ரீவைகுண்டம் வட்டம் - முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டதால், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் அருப்புக்கோட்டை வட்டம் – கள்ளக்காரி கிராமத்தில் வி.ஏ.ஓ.வாகப் பணியாற்றி வந்த பிரிதிவிராஜ், தன்னுடைய 37வது வயதில் பணியை ராஜினாமா செய்துவிட்டு அதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.  

 

‘இந்த காலகட்டத்தில் ஒருவர் நேர்மையானவராக அரசுப் பணியில் இருப்பது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும். சட்டவிரோத செயல்களுக்குத் துணை போகமாட்டேன் என்றும் மக்களுக்காக உழைப்பேன் என்றும் அரசுப் பணியில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் ஒரு காலகட்டத்தில் புற அழுத்தம் காரணமாக தங்கள் கொள்கைகளை தாங்களே கரைத்துக்கொண்டு பணமே குறி என்று மாறிவிடுகிறார்கள். அரசியல் அழுத்தம், அதிகாரிகளின் அழுத்தம்,  அதைவிட இச்சமூகத்தில் கொலை - கொள்ளை செய்பவர்களின் அழுத்தத்திற்குக்கூட அடிபணிந்து,  தடம் மாறிப்போகும் அரசு ஊழியர்களுக்கு இடையே,  எதுவாயினும் உயிர் போயினும் நேர்மையைக் கைவிடேன் என்ற நெஞ்சுரத்தோடு வாழும் நேர்மையாளர்கள் என்ற சிறுபான்மைக் கூட்டத்தில் நானும் ஒருவன்.

 

எத்தனையோ அச்சுறுத்தல்கள்,  எத்தனையோ மிரட்டல்கள்,  எத்தனையோ அழுத்தங்கள் வந்தபோதிலும்,  மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறும் நான், மக்களுக்காக உழைக்க வேண்டிய கடமையுணர்வுகொண்ட ஒரு  அரசு ஊழியன் என்ற கர்வத்திலேயே, அத்தனை அழுத்தங்களையும் புறந்தள்ளிவிட்டுப் பயணித்தேன். பணமும்,  நிலமும்,  பதவியுமே வாழ்வின் அதிமுக்கியத் தேவை எனக்  கருதுபவர்கள், எந்தத் தவறையும் செய்யும் துணிவுக்குச் சென்றுவிடுகிறார்கள். அத்தகைய தவறானவர்களால்,  இச்சமூகத்தின் அத்தனை விதிகளுக்கும் கட்டுப்பட்டு வாழும் மக்களுக்கு எந்த நன்மையும் சென்று சேர்வதில்லை. ஒரு கிராம நிர்வாக அலுவலராய்,  விதிகளுக்கு உட்பட்டு, அதிகாரத்திற்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ,  அதைச் செய்தேன்.  ஆனாலும் எந்த ஒரு மாற்றத்தையும் இந்தக் கட்டமைப்பில் என்னால் கொண்டுவர முடியவில்லை  என்ற வருத்தம் என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 

மக்களுக்காக மக்களால் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கத்தில், மக்களுக்குச் சேர வேண்டிய உதவியை அரசிடமிருந்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதுவே அரசுப் பணி. ஆனால் கொம்பு முளைத்துவிட்டதாய்த் திரியும் பலருக்கு இது உரைப்பதே இல்லை. உரைக்கும் நாள் வரும். அந்நன்னாளில்,  நானும் ஒரு  நேர்மையான அரசு ஊழியனாய் இருந்தேன் என்று கடைசிப் பெருமூச்சை விட்டபடி உயிர்பிரியக் காத்திருக்கிறேன்.’ என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் பிரிதிவிராஜ் “ஒரு நேர்மையான அரசு அலுவலர் சந்திக்கக்கூடிய அடிப்படை பிரச்சனைகளை நான் சந்திக்காமல் இல்லை.  வேலைக்கு வந்த 2011-2012 காலகட்டத்திலேயே நிறைய சந்தித்தேன். அரசியல் அழுத்தங்களையும் சந்தித்திருக்கிறேன்.  அரசு உயர் அதிகாரிகள் தந்த அழுத்தங்களையும் சந்தித்தித்திருக்கிறேன். இவையனைத்தும் கண்டிக்க வேண்டிய விஷயம்தான். ஒரு நேர்மையான கிராம அதிகாரி அநியாயம் செய்பவர்களுக்கு எதிராகப் போராடினால்,  இதுதான் (கொலை) நடக்கும் என்றால்  இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்காதபடி, சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.  அரசு ஊழியர்களின் பாதுகாப்பை  அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.” என்கிறார்.

 

நம்மிடம் பிரிதிவிராஜ், “நான் ராஜினாமா செய்ததற்கு என்னுடைய தனிப்பட்ட மனநிலை, குடும்பச் சூழ்நிலைதான் காரணம். தற்போது, அரசியல் அழுத்தமோ, அதிகாரிகள் அழுத்தமோ எதுவும் இல்லை. முழுநேர குடும்ப நலன், அறக்கட்டளை சார்ந்த சமூகப் பணிகளை மேற்கொள்வதற்காகவே அரசுப் பணியைத் துறந்திருக்கிறேன்.” என்றார்.

 

அடுத்து என்ன செய்யப்போகிறார் பிரிதிவிராஜ்?

 

வி.ஏ.ஓ.வாக இருந்தபோது, கரோனா காலகட்டத்தில் பிரிதிவிராஜ் ஆற்றிய சேவைக்காக, அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து விருது பெற்றுள்ளார். சமூக அக்கறையுள்ள பிரிதிவிராஜ், விபத்தில் தன்னுடைய தம்பி ராஜேஷ் இறந்த பிறகு, தம்பி பெயரில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்து வருகிறார். இராஜேஷ் உதவும் கரங்கள் டிரஸ்ட், கலாம் மன நிறைவு இல்லம் நடத்தி வரும் பிரிதிவிராஜ், உணவளித்து மகிழ், இரத்த தானம், கல்விச்சேவை, கட்டணமில்லா ஆம்புலன்ஸ் சேவை, இயலா நிலை உறவுகளின் இறுதிச்சடங்கு சேவை ஆகியவற்றில் இனி முழு நேரமும் ஈடுபடவிருக்கிறார்.

 

‘கருவறை முதல் கல்லறை வரை நான் பார்க்கும் உன்னதப் பணி’ என 2011ல் வி.ஏ.ஓ. பணியில் சேர்ந்தபோது பெருமிதத்துடன் குறிப்பிட்ட பிரிதிவிராஜ்,  ‘தனிமனித ஒழுக்கமே நல்ல துணை. அது கடினமென்றாலும் விரும்பி காத்திட வேண்டும்.’ என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்