![Prime Minister visit to Mudumalai elephant camp](http://image.nakkheeran.in/cdn/farfuture/LmYScxmtZC-fsS4JuUQ3seuiB2zy-YqtptSqeeCLDs4/1681005625/sites/default/files/inline-images/th-1_3772.jpg)
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தைத் திறந்து வைத்தார். பின் ஹெலிக்காப்டர் மூலம் அடையாறு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பிரதமர் மோடி, சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, தமிழ் மக்கள் மீது தனக்கு மிகுந்த ஈர்ப்பு இருப்பதாகவும், தான் தமிழ் மொழியை; தமிழ்க் கலாச்சாரத்தை மிகவும் நேசிப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இரவு தனி விமானத்தின் மூலம் பெங்களூர் சென்ற பிரதமர் மோடி இன்று காலை நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிடுகிறார். அதன் பின்பு 9.35 மணிக்கு பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சாலை மார்க்கமாக செல்லவுள்ளார். அங்கு ஆஸ்கர் விருது வென்ற "தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள பாகன்கள் பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்தித்து பாராட்டவுள்ளார். பின்பு படத்தில் இடம்பெற்ற ரகு, பொம்மி யானைகளை பார்வையிட்டு, அவற்றிற்கு உணவு வழங்குகிறார். தொடர்ந்து சில அரசு நிகழ்வில் கலந்துகொண்டு பின் மசினகுடி வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூருக்கு செல்கிறார். பிரதமரின் வருகையையொட்டி முதுமலை மற்றும் மசினகுடி பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.