காமராஜரின் கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. காமராஜர் பிறந்த தினம் தமிழக அரசு சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் தமிழக பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கர்மவீரர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் எல்லாவிதமான மக்களுக்கும் ஆட்சியாளர்கள் துணையிருந்து தமிழகத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு உறுதியாக நின்றார்கள். குறிப்பாக, விவசாயத்திற்கு 13 தடுப்பணைகள் கட்டி தமிழகத்தை மிகப்பெரிய விவசாய மாநிலமாக மாற்றியதில் பெரும் பங்கு காமராஜருக்கு இருக்கிறது. அதே போன்று தொழில் துறையில் மத்திய அரசின் தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டு வந்து 9 ஆண்டு கால ஆட்சியில் தொழில் துறையிலும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்.
தமிழகத்தில் மட்டுமல்லாது காமராஜர் எல்லா இடங்களிலும் கொண்டாடப்பட வேண்டியவர். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிதண்ணீர் குழாயில் வரவேண்டும் என்பது காமராஜருடைய கனவு. அந்த கனவை பிரதமர் மோடி ஜல் ஜீவன் திட்டம் மூலமாக மூலமாகக் கொண்டு வருகிறார். இதுபோன்று காமாரஜரின் பல கனவுகளை இன்று பிரதமர் மோடி இந்தியா முழுவதும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, விவசாயத்திற்கு காமராஜர் தமிழகத்தில் எடுத்த முன்னெடுப்புகளை இன்றைக்கு இந்தியா முழுவதற்கும் பிரதமர் மோடி முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.