
அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று (13/10/2022) காலை 09.00 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "இந்தியை வைத்து தி.மு.க. அரசியல் நாடகம் செய்கிறது; இந்தியைத் திணித்த காங்கிரஸ் உடன் தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. பா.ஜ.க. தமிழக மக்கள் மத்தியில் பெரியளவில் வளர்ந்திருக்கிறது.
நம்முடைய பாரத பிரதமரை பொறுத்தவரை எல்லா தலைவர்களுடைய குருபூஜைக்கு தமிழகத்திற்கு வர வேண்டும் என்பது அவருடைய ஆசை. தமிழகத்தில் மட்டும் தான் இந்த கலாச்சாரம் மிகப்பெரிய அளவிலே இருக்கிறது. அனைத்து தலைவர்களையும் மிகப்பெரிய அளவிலே கொண்டாடுகிறோம். குருபூஜை எடுக்கின்றோம்; விழாவாக எடுக்கின்றோம். குருபூஜை அன்று ஆயிரக்கணக்கான தூரம் மக்கள் நடக்கின்றனர். காவடி எடுக்கின்றனர்.
வரும் அக்டோபர் 30- ஆம் தேதி அன்று தேசியமும், தெய்வீகமும் இரண்டு கண்களாக மதிக்கக் கூடிய ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா மிகப்பெரிய அளவிலே நடக்கிறது. இதில் பா.ஜ.க. பங்கேற்கிறது. எங்களை பொறுத்தவரை பிரதமர் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வர வேண்டும். அனைத்து குருபூஜைக்கும் வர வேண்டும் என்பது ஆசை. ஆனால், இந்த செய்தி எங்கே இருந்து ஆரம்பித்தது என எனக்கு தெரியவில்லை.
பிரதமர் வரும் நிகழ்ச்சிகள் அனைத்துமே இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டிருக்கும். அதனால் வரும் அக்டோபர் 30- ஆம் தேதி அன்று நம்முடைய பாரத பிரதமர், தமிழகம் வரப்போகின்ற புரோகிராம் எதுவும் இல்லை. அக்டோபர் 30- ஆம் தேதி அன்று பிரதமர் தமிழகம் வருகின்ற செய்தி எதுவும் இல்லை. அதேபோன்று, பிரதமர் வருகை குறித்து பிரதமர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இல்லை" எனத் தெரிவித்தார்.