Skip to main content

"வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்தது வரலாற்று சிறப்புமிக்கது" - முத்தரசன்

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

The presentation of a separate budget for the agriculture sector is historically significant: Mutharasan

 

வேளாண் துறைக்கு தமிழக அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்தது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், “9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பங்கு பெறுவது குறித்து விவாதித்தோம். நாடாளுமன்ற கூட்டம் 11ம் தேதியே முடிந்துவிட்டது எனக் கூறி விட்டனர்.  மக்களின் பிரச்சனைகளைப் பேசுவதற்கு நம் நாடாளுமன்றம் அனுமதி அளிப்பதில்லை.

 

9 மாதமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். மின்சார திருத்தச் சட்டம் நிறைவேறி உள்ளது. இதை எல்லாம் எதிர்த்துக் கேட்க முடியவில்லை. அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் போன்ற பலரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை 5000 இடங்களில் மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் நிகழ்வாக தேசியக் கொடி ஏற்றுவோம். பின்னர் எப்படி நாடாளுமன்றம் நடைபெறுமோ அதே போல் நடத்த உள்ளோம். பின்னர் தீர்மானம் இயற்றி அதை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க உள்ளோம்.

 

கடுமையான நிதி நெருக்கடியில் கூட தமிழக அரசு அனைவருக்கும் 4000 ரூபாய் வழங்கியது. பெண்களுக்கு இலவச பயணம் என மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. பெட்ரோல் விலை குறைவு குறித்த அறிவிப்பும் வெளியானது. இது இருசக்கர வாகனத்தை வைத்துள்ளோர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. நிதி நிலை அறிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம். 

 

வேளாண் துறைக்குத் தனி நிதி அறிக்கை என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க செயல். கூட்டுறவுச் சங்கங்கள் பாழாய் போய்விட்டது. ஆனால், தற்போது அது பலப்படுத்தப்படும் என்று கூறி உள்ளனர். 50% பேர் தான் ஓட்டங்களில் கூட வேண்டும் என்ற சூழலில், கிராம சபைக் கூட்டம் என்பது நடத்துவது சாத்தியம் அல்ல. நெல் கொள்முதல் நிலையங்கள் பல இடங்களில் நிரந்தர கட்டிடம் உள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் திறந்தவெளி கொள்முதல் நிலையமாக உள்ளது. எனவே, எல்லா இடங்களிலும் கண்டிப்பாக நிரந்தர நெல் கொள் முதல் கட்டிடமாக மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்