தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் பி.ஆர்.பாண்டியன் இன்று புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஆய்வு செய்தபின் பேசும்போது, "தமிழ்நாட்டில் வானிலை மையம் கூட கணிக்க முடியாத வகையில் பருவம் தப்பிய தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடலூர் மாவட்டம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் வரை டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த 15 லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் மழைத்தண்ணீரில் மூழ்கி முளைத்தும் அழுகியும் அழிந்து நாசமாகி விட்டன. இந்த நிலையில் தமிழக அரசு ஒரு ஹெக்டேருக்கு இடுபொருள் செலவாக ரூபாய் 20 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்து கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இதில் பல கிராமங்கள் விடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசு உடனடியாக அந்த நடைமுறையைக் கைவிட்டுவிட்டு டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும். பாதிப்பின் தன்மையை அரசு உணர்ந்து உடனடியாக உயர்மட்ட குழுவை அமைத்து நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மார்ச் மாதத்திற்குள் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய காலங்களில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுத்தார். அதே போல எடப்பாடி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பருவம் தப்பிய மழை பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு பேரிடர் பகுதியாக அறிவித்து உரிய நிதியை வழங்க வேண்டும்" என்றார்.