திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலக சாலையில் லியோ கார் உதிரிபாகங்கள் விற்பனை கடை இயங்கி வருகிறது. நேற்று (04.05.2021) இரவு வழக்கம் போல் கடையைப் பூட்டிவிட்டு சென்ற நிலையில், இன்று காலை 5:30 மணி அளவில் கடைக்குள் இருந்து புகை வருவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கடையின் பூட்டை உடைத்து திறந்தபோது உள்ளே இருக்கக்கூடிய உதிரிபாகங்கள் அனைத்தும் முழுமையாக எரிந்து சாம்பலாகி இருந்தது தெரிய வந்தது. அதோடு, அருகில் உள்ள டபுள்ஸ் ட்ரெயின் என்ற பேக்கரியும், மற்றொரு கார் பழுது பார்க்கும் கடையும் சேர்ந்து முழுமையாக எரிந்துள்ளன. பின்னர் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இந்த மூன்று கடைகளிலும் சேர்த்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மின்கசிவு ஏற்பட்டு இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.