போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கி இருந்தனர். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. இதனையடுத்து தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வேலைநிறுத்த போராட்டம் ஜனவரி 9 ஆம் தேதி நள்ளிரவில் தொடங்கி இருந்த நிலையில் மறுநாளான ஜனவரி 10 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை அம்பத்தூரில் உள்ள தொழிலாளர் நல தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் இன்று (19.01.2024) நடைபெற்றது. இதனையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் அடுத்த கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போக்குவரத்துத் துறை சார்பில் எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஊதிய உயர்வு, அகவிலைப்படி உள்ளிட்டவை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 6 ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வர உள்ளது. இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.