
பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற டிச.26 முதல் டிச.30 வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம், இருப்பாளியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசாக, ரூபாய் 2,500 வழங்கப்படும். 2021- ஆம் ஆண்டு ஜனவரி 4- ஆம் தேதி முதல், ரூபாய் 2,500 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். துண்டுக் கரும்புக்கு பதிலாக, முழு கரும்பு வழங்கப்படும். ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, முழு கரும்பு ஆகியவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். ஜனவரி 4- ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி துவங்கும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற டிச.26 முதல் டிச.30 வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 வழங்கிவந்த நிலையில், இம்முறை இது ரூபாய் 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.