பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், அ.தி.மு.க. கட்சியின் பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் பைக் பாபு, ஹேரென் பால் உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், அவர்களைக் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, மூன்று பேரையும் ஜனவரி 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அ.தி.மு.க.வின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாலும், அ.தி.மு.க. கட்டுப்பாட்டை மீறி அ.தி.மு.க.விற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அருளானந்தம் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.