தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில், தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள் மும்மரமாக இயங்கி வருகின்றன.
திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், நாளை (04.03.2021) சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். தினேஷ் குண்டுராவ், வீரப்பமொய்லி, கே.எஸ்.அழகிரி ஆகியோர் இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் பங்குபெற இருக்கிறார்கள்.
இந்நிலையில் கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று தெரிவித்தார். அதேபோல் திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு, “பந்து திமுகவிடம் உள்ளதால், காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து அவர்கள்தான் முடிவெடுப்பார்கள்” என்று கூறினார்.