
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே பள்ளி மாணவியை காதல் என்ற பெயரில் கர்ப்பமாக்கிய ஆயுதப்படை காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். ஆயுதப்படை காவலர். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சிறுவாச்சூரைச் சேர்ந்த பிளஸ்2 மாணவி ஒருவருடன் பிரபாகரனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்களிடையே உறவு இருந்து வந்தது. மாணவியை பல இடங்களுக்கு தனியாக அழைத்துச் சென்று நெருக்கமாக இருந்துள்ளார். இதில், அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.
இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்குத் தெரிய வந்ததை அடுத்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மார்ச் 24ம் தேதி, பிரபாகரனை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது காவல்நிலையத்தில் இருந்து பிரபாகரன் திடீரென்று வெளியே ஓட்டம் பிடித்தார். காவல்துறையினர் அவரை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனிப்படை காவலர்கள் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் பிரபாகரன் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் விரைந்து சென்று அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர், திங்கட்கிழமை (மார்ச் 27) நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. அவரிடம் தலைவாசல் காவல்நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, பிரபாகரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி சேலம் மாவட்ட எஸ்.பி சிவகுமார் பெரம்பலூர் மாவட்ட எஸ்.பிக்கு பரிந்துரைத்துள்ளார். அதன் பேரில், பெரம்பலூர் எஸ்.பி ஷியாமளாதேவி காவலர் பிரபாகரனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.