ஊரடங்கு உத்தரவினால் ஒருவேலை உணவுக்கே வழியின்றி விழிபிதுங்கி வீட்டில் முடங்கிக்கிடக்கும் பொதுமக்களுக்கு பந்தநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சுகுணா தனது சொந்த செலவில் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கி பலரையும் நெகிழ வைத்திருக்கிறார்.
கரோனா வைரஸ் விவகாரம் உலகையை அச்சுறுத்திவருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட அனைத்து இந்திய மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவினால் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் வருமைகோட்டிற்கு கீழே வாழும் பொதுமக்கள் அன்றாட உணவுத் தேவைக்கு விழிபிதுங்கி நிற்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர்களின் நிலமையை மனதளவில் உனர்ந்த தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பந்தநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் சுகுணா தனது சொந்த செலவில், ஊரடங்கு துவங்கிய மறுநாளில் இருந்து தினசரி இரண்டு கிராமங்களை தேர்வு செய்து அரிசி, பிரட், சோப்பு, உள்ளிட்ட பொருட்களை வழங்கிவருகிறார்.
அந்தவகையில் இன்று 29 ம் தேதி பந்தநல்லூர் அருகே உள்ள கீழகாட்டூர், மேலக்காட்டூர் ஆகிய கிராமத்தில் வசித்துவரும் மிகவும் பின்தங்கிய குடும்பத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை தெரிவு செய்து ஐந்து கிலோ அரிசி, சோப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கினார். உணவுப்பொருட்களை பெற்றுச்சென்ற பொதுமக்கள் முகம் மலர்ந்து, மனம் மகிழ்ந்து சென்றது பலரையும் நெகிழவைத்தது.
இது குறித்து பந்தநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சுகுனா கூறுகையில், "பந்தநல்லூர் காவல்சராகத்திற்கு உட்பட்ட அனைத்துக்கிராமங்களுமே, விவசாயத்தை நம்பிய இருக்கிறது. விவசாயக்கூலி தொழிலாளிகள் நிறம்பவே இருக்கின்றனர். தினசரி ஏதாவது ஒரு வேலைக்கு சென்றால் தான் அவர்களின் வீட்டில் உலை கொதிக்கும் என்கிற நிலைதான். ஊரடங்கால் மொத்தக்குடும்பமும் பசியோடு இருப்பதை நாங்கள் கொரோனா விழிப்புனர்வு செய்யும்போது உனர்ந்தே இந்த சிறு உதவியை செய்துள்ளோம்" என்கிறார் மகிழ்ச்சியாக.
காவல்துறையினருக்கும் மனசு இருக்கிறது, அவர்களுக்கும் ஏழைகளின் மனநிலையை உனரமுடியும் என்பதற்கு இதுவே சான்று.