பெரியார் வேடமிட்ட குழந்தையை அடித்துக் கொன்று விட வேண்டும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் வேடமணிந்து குழந்தை ஒன்று பங்கேற்றிருந்தது. இக்குழந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கோவில்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பெரியார் போல வேடமிட்டு நடித்த குழந்தையை அடித்துக் கொன்று பொது இடத்தில் தூக்கில் தொங்க விட வேண்டும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார். அப்படி செய்தால் தான் மற்ற குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் அச்சம் வரும் என்றும் வெங்கடேஷ் குமார் பதிவிட்டிருந்தார்.
பீதியையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வெங்கடேஷ் குமார் மீது கயத்தாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், சாதி, மதம், இனம் தொடர்பான உணர்ச்சிகளைத் தூண்டுதல், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அச்சமூட்டுதல், மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.