விழுப்புரம் நகரில் உள்ள வண்டிமேடு வடிவேல் நகரைச் சேர்ந்தவர் காலம் சென்ற அண்ணாதுரை. இவருடைய முதல் மனைவியின் மூலம் முருகன் என்ற மகனும் இரண்டாவது மனைவியின் மூலம் ஜெகதீஸ்வரி, கலையரசி ஆகிய இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். இவர்களில் முருகன் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள நல்லூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 2007ஆம் ஆண்டு அவரது தந்தை அண்ணாதுரையும் 2013 ஆம் ஆண்டு அவரது தாயாரும் இறந்து விட்டனர்.
இந்த நிலையில், நான் மட்டுமே அண்ணாதுரைக்கு ஒரே வாரிசு என்று கூறி முருகன், 2007 ஆம் ஆண்டு இறந்த அண்ணாதுரையை 2018ஆம் ஆண்டு இறந்ததாகக் கூறி போலி ஆவணங்களைத் தயார் செய்து, அதன்மூலம் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்று பெற்றதாகத் தெரிகிறது. மேலும், அந்த சான்றிதழை வைத்து அண்ணாதுரைக்கு சொந்தமான நிலத்தை முதல் மனைவிக்குப் பிறந்த மகன் முருகன், கள்ளக்குறிச்சி மாவட்டம் நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராசு என்பவருக்கு விலைக்கு விற்பனை செய்துள்ளார்.
அரசு அதிகாரிகள் துணையுடன் கூட்டுச் சேர்ந்து பொய்யான இறப்பு சான்று, அதன்மூலம் வாரிசு சான்றிதழ் பெற்று அதை வைத்து மோசடி பத்திரம் தயார் செய்து இந்த விற்பனையை மேற்கொண்டுள்ளார். போலி ஆவணங்கள் தயாரிப்பு, நிலம் விற்பனை ஆகியவற்றில் சம்பந்தப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டம் கீரப்பாளையம் மாயவன், முருகன், கிராம நிர்வாக அலுவலர் ராஜி, நில வருவாய் ஆய்வாளர் பழனி, வேப்பூர் தாசில்தாராக அப்போது இருந்த கமலா, நின்னையூர் தேவராசு ஆகிய ஆறு பேர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருத்தாசலம் நீதிமன்றத்தில் இறந்து போன அண்ணாதுரையின் இரண்டாவது மனைவியின் மகள் ஜெகதீஸ்வரி புகார் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து வேப்பூர் போலீஸார் வட்டாட்சியர் கமலா உட்பட ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வட்டாட்சியர் கமலா தற்போது விருத்தாசலம் கலால் வட்டாட்சியராகப் பணி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.