குடிபோதையில் பாமக நிர்வாகியைத் தாக்கிய எஸ்.ஐ.க்கு முக்கியப் பதவி வழங்குவதா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சின்னசேலம் பா.ம.க. ஒன்றிய செயலர் சக்திவேலைக் குடி போதையில், ஊரே வேடிக்கை பார்த்த நிலையில் வீடுபுகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர் சுதாகர் முதலில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு அனைத்து மரியாதையுடன் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமரவைக்கப்பட்டார்.
ஆய்வாளர் சுதாகர் மனித உரிமை மீறலுக்காகத் தண்டிக்கப்பட்டவர். அவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது கடந்த காலப் பின்னணி மிக மிக மோசமானது. அவர் மீதான புகாருக்கு விசாரணையின்றியே தண்டிக்க முடியும். ஆனால், வீடியோ ஆதாரம் வெளியாகியும் நடவடிக்கை இல்லை.
4 நாட்கள் ஆயுதப்படையில் இருந்த சுதாகருக்கு இப்போது அடுத்த வெகுமதியாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மனித உரிமை மீறல் குற்றவாளிக்கு இப்படி மகுடம் சூட்டப்படுவதற்கு உபயதாரர் யார்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.