கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான்குளம் கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவரின் மகன் பன்னீர்செல்வம். கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு சொந்தமாக பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன.
இந்நிலையில் பன்னீர்செல்வம் வழக்கம்போல் ஆடுகளை மேய்ப்பதற்காக வயல்வெளி பகுதிக்கு கொண்டு சென்று உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அதே ஊரை சேர்ந்த ராமானுஜம் மகன் பாலமுருகன் என்பவரின் வயல் பகுதிக்கு ஆடுகள் சென்றதாக கூறப்படுகிறது. வயலுக்குச் சென்ற ஆடுகள் பல மணி நேரமாக வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பன்னீர்செல்வம் மேய்ச்சலுக்கு செல்லும் பகுதிக்கு சென்று பார்த்தபோது பாலமுருகனின் வயலில் 5 ஆடுகள் இறந்து கிடப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அதேபோல் அதே ஊரை சேர்ந்த பழனிவேல் என்பவரின் இரண்டு ஆடுகளும் இறந்து கிடந்தன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் லதா தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் பாலமுருகன் என்பவரது வயலில், ஆடுகள் இறந்து கிடப்பதால், அவரை கைது செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆடுகள் எவ்வாறு இறந்தது என்றும், கொடிய விஷத்தை கலந்து கொடுத்து ஆடுகளை கொன்றார்களா? அல்லது முன்விரோத பகையின் காரணமாக கொன்றார்களா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், உயிரிழந்த ஆடுகளை கால்நடை மருத்துவமனைக்கு, உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர். மேய்ச்சலுக்காக சென்ற, ஆட்டை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.