Skip to main content

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நிறுவனத்தின் பேருந்தை கடத்தி வந்த நபர்; வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல்..!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

The person who hijacked the ADMK MLA company bus; Sensational information in the confession ..!

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ளது டி.வி.புத்தூர். இந்தக் கிராமத்தை சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மகன் பரசுராமன் வயது 50. இவர் ஈரோடு பெருந்துறையில் உள்ள அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலத்தின் நிறுவனமான கார்மெண்ட் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக பணி செய்து வருகிறார். இந்த நிறுவனத்தில் இவரைப் போன்று 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேருந்து ஓட்டுநர் பணி செய்து வருகிறார்கள். கடந்த ஏழு மாதத்திற்கு முன் அங்கு வேலையில் சேர்ந்து உள்ளார். 
 

கடந்த நான்கு மாதங்களாக நிர்வாகம் இவருக்கு சம்பளம் வழங்கவில்லை. சம்பளம் கேட்டபோது நிர்வாகத்தில் இருந்தவர்கள் சம்பளம் தர மறுத்ததோடு இவரை  கடந்த இரண்டு நாட்களாக தனி அறையில் அடைத்து வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும் அங்குள்ள நிர்வாகிகள் பரசுராமரிடம் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்தை அவர் கடத்தி சென்று விட்டதாக கூறி காவல்துறையில் பொய் புகார் கொடுத்துள்ளோம் என்று மிரட்டியுள்ளனர். 
 

அதேபோன்று அந்த நிறுவனம் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த புகாரின் மீது பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டுனர் பரசுராமன், பொய்யாக அவர்கள் கொடுத்த புகாரை உண்மையாக்கிகாட்ட வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் பேருந்து ஒன்றை உண்மையாகவே எடுத்துக்கொண்டு நேற்று விருத்தாசலம் வந்துள்ளார். அங்கு வந்தவர் அங்கு வழக்கறிஞராக உள்ள அருள் குமார் என்பவரிடம் நடந்த விஷயத்தை கூறி பேருந்து எடுத்து வந்த விவரத்தையும் சம்பள பிரச்சனை காரணமாக தன் மீது போலீசில் பெருந்துறையில் புகார் கொடுத்துள்ளது பற்றியும் கூறியுள்ளார். 

 

The person who hijacked the ADMK MLA company bus; Sensational information in the confession ..!


இதையடுத்து வழக்கறிஞர் அருள்குமார், ஆலோசனைப்படி அந்த பேருந்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார். விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார் வழக்கறிஞர் அருள் குமார். இந்த தகவல் அறிந்ததும் விருத்தாச்சலம் டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பரசுராமனை விருத்தாசலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது டிரைவர் பரசுராமன் போலீசாரிடம் கூறுகையில் கடந்த நான்கு மாதமாக அந்த நிர்வாகம் சம்பளம் தராமல் ஏமாற்றி வந்தது, சம்பளத்தை கேட்டதற்காக கடந்த இரண்டு நாட்களாக அங்கு உள்ள அறையில் என்னை கட்டிப் போட்டு அடித்து துன்புறுத்தினார்கள். அப்போது நீ பேருந்தை கடத்தி சென்று விட்டதாக நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் காவல்துறை உன்னை சிறைக்கு அனுப்பும் என்று அவர்கள் கூறி மிரட்டினார்கள்.



அங்கிருந்து தப்பி வெளியே வந்த நான் அவர்கள் கூறிய பொய்யை உண்மை என்று காட்டுவதற்காகவும் மேலும் கடந்த நான்கு மாதங்களாக என்னை மட்டுமல்ல அங்கு என்னைப் போன்று வேலை செய்யும் 200க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை சம்பளம் கேட்க சென்றவர்களை அந்த நிறுவன மேலாளர் அவரது அடியாட்கள் அங்குள்ள குடோன் ஒன்றில் அடைத்து வைத்து எங்களை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். நான் செய்தது குற்றமாக இருந்தாலும் எங்களுக்கு சம்பளம் தராமல் தொழிலாளர்களை அடித்து உதைக்கும் அந்த நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கடும் உழைப்புக்கு தரவேண்டிய சம்பளத்தை பெற்றுத் தர வேண்டும் என்று போலீசாரிடம் கூறியுள்ளார். மேலும் நான் வேலை செய்துவந்த நிறுவனம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக உள்ள தோப்பு வெங்கடாச்சலத்தின் நிறுவனம் என்கிறார் பரசுராமன். ஆளும் கட்சி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலத்தின் தரப்பு இதற்கு என்ன பதில் கூறப்போகிறது என்று தெரியவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்