கடலூர் மாவட்டம், திட்டக்குடி நடுத்தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் ராஜா (49). இவர், கடந்த 5ஆம் தேதி கரோனா பாதிப்பு காரணமாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து 15 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி அவர் திடீரென உயிரிழந்தார்.
அதையடுத்து அவரது மனைவி கயல்விழி, அவரது உறவினர்கள் ஆகியோர், ‘ராஜாவிற்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், ராஜாவிடமிருந்து வெண்டிலெட்டரை எடுத்து வேறு ஒரு நோயாளிக்கு வைக்கப்பட்டதால் அவர் உயிரிழந்ததாகவும், அவர் உயிரிழப்புக்கு மருத்துவர்களே காரணம்' என கூறி மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இதற்கான விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று (28.05.2021) கடலூர் சுற்றுலா மாளிகையில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன், மாலதி பிரகாஷ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு உயிரிழந்த ராஜாவின் மனைவி கயல்விழி, ராஜா இறந்த அன்று கடலூர் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர், செவிலியர்கள் என 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிந்து வெளியே வந்த ராஜாவின் மனைவி கயல்விழி செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது கணவர் ராஜா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் நியாயமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணை எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது. என் கணவர் உயிரிழந்த அன்று என்ன நடந்தது என்பது குறித்து என்னிடம் விரிவாக விசாரித்தனர். தெளிவாக எடுத்துக் கூறினேன். எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள், கொடுத்தேன். விசாரணை அதிகாரிகள் எனக்கு தைரியம் கொடுத்துள்ளார்கள். இதனால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.