Skip to main content

மனைவியை வெட்டிவிட்டு தப்பியவர் விபத்தில் பலி 

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
person passes away in accident near tanjore

தஞ்சையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி உள்ளிட்ட மூன்று பேரை அரிவாளால் வெட்டி விட்டு காரில் தப்பிய கணவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரை சேர்ந்தவர் நித்தியா. ஐ.ஓ.பி. மண்டல மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சுந்தர் கணேஷ். வங்கி ஒன்றில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனையின் காரணமாக அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இரண்டு மாதமாக வேலைக்கு செல்லாமல் சுந்தர் கணேஷ் வீட்டிலேயே இருந்துள்ளார். 

இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த தனது மனைவி நித்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு வெளியே நிறுத்தி வைத்திருந்த தனது காரில் வெட்டிய அரிவாளுடன் தப்பி சென்றார். பிறகு யாகப்பா நகர் பிரதான சாலையில் உள்ள பால் டிப்போவில் இருந்த கடை உரிமையாளர்கள் கோபி மற்றும் தாமரை ஆகிய இருவரையும் வெட்டிவிட்டு காரில் தப்பி சென்றுள்ளார். தப்பிச் செல்லும் போது தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றபோது டிப்பர் லாரி மீது பக்கவாட்டில் மோதியதில் கார் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது காரில் இருந்த அரிவாள் மற்றும் அவரது கை துண்டாக கீழே விழுந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அரிவாள் வெட்டு சம்பந்தமாகவும் விபத்தில் உயிரிழந்தது சம்பந்தமாகவும் தஞ்சை நகர தெற்கு காவல் துறை, தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் மற்றும் செங்கிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக ஒரு வீடு வாங்கியுள்ளனர். ஆனால், கணவரின் விருப்பம் இல்லாமல் இந்த வீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் பால் டிப்போவில் இருந்த இருவரை ஏன் தாக்கினார் எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்