ஆற்றில் வாலிபர் குளித்துக் கொண்டிருப்பது தெரியாமல் அந்த இடத்தில் மீன் பிடிப்பதற்காக வீசப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங்காட்டைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் மோகன்குமார் (22). இவர், சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி ஆணைபுலிக்காடு காவிரி ஆற்றில், ஏப். 19ம் தேதி மாலை குளித்துக் கொண்டிருந்தார். அவருடன், பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் பூபதி (22) என்பவரும் வந்திருந்தார். ஆனால் அவர் ஆற்றில் இறங்காமல் அங்கிருந்த பாறை மீது நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் (45) என்பவர், மீன் பிடிப்பதற்காக பாறையை தகர்க்கப் பயன்படுத்தும் வெடிமருந்து தோட்டாவை காவிரி ஆற்றில் வீசினார். தோட்டா வெடித்துச் சிதறியதில், அங்கு குளித்துக் கொண்டிருந்த மோகன்குமார் அதிர்ச்சியில் காது, மூக்கில் ரத்தம் வெளியேறி நிகழ்விடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் வெடிகுண்டு வீசிய பெருமாளை கைது செய்தனர்.