கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுவுக்கு அடிமையான மது குடிப்போர்கள் குடிப்பதற்கு மது கிடைக்காமல் போதை இல்லாமலேயே தள்ளாடுகிறார்கள். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல போதை ஏறுவதற்கு எதை குடிக்கலாம் என மூளையைக் கசக்கிக் கொள்கிறார்கள். அதன் விளைவாக தற்போது தமிழகமெங்கும் ஹோட்டல்கள், மருந்துக்கடைகள் போன்றவை மட்டுமே திறந்துள்ளது.
அப்படிப் மருந்துக்கடைகளில் இருமலுக்கு டாக்டர்கள் பரிந்துரையின் பெயரில் கொடுக்கப்படும் சிரப்பு மருந்து பாட்டில்களை வாங்கிக் குடிக்க ஆரம்பித்துள்ளனர் மது அருந்துவோர். இருமல் சம்பந்தமான நோய்களுக்கு டாக்டர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யும் மருந்து பாட்டில்களில் இருக்கும் அந்த மருந்தில் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் கலந்திருக்கும். அதற்கு காரணம் மருந்து குறிப்பிட்ட காலம் வரை கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ஆல்கஹால் கலப்பது உண்டு. அப்படிப்பட்ட இந்த மருந்தை 5 மில்லி 10 மில்லி வரை மட்டுமே நோயாளிகள் காலை, மாலை குடிக்க வேண்டும் சிறுவர்கள் குழந்தைகளுக்கு இன்னும் அளவை குறைத்துக் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுவார்கள்.
அப்படிப்பட்ட இந்த இருமல் மருந்தில் ஆல்கஹால் கலந்திருப்பதால் அதிக அளவில் குடித்தால் மயக்கம் கலந்த போதை வரும் என்பதால் குழந்தைகள் முதல் சிறுவர்கள், பெரியவர்கள் வரை இதற்கென்று அளவை வரைமுறை செய்து பரிந்துரை செய்வார்கள். அதன்படி மருந்து கடைகளில் வாங்கி நோயாளிகள் குடிப்பது வழக்கம். இதில் உள்ள ஆல்கஹால் போதை தரும் என்பதை புரிந்து கொண்ட மது குடிப்போர்கள், இப்போது அதை வாங்க மருந்துக்கடைகளில் முற்றுகையை இடுகின்றனர் என்ற தகவல் பரவலாக வெளிவந்துள்ளது. மேலும் மது பாட்டில்கள் விலை அதிகம், இருமல் சிரப்பு மருந்துகள் விலை குறைவு எனவே குறைவான விலையில் நிறைவான போதை கிடைக்கும் என்பதால் மது அருந்துவோர் இருமல் மருந்துகளை குடிக்கும் நிலை அதிகரித்துள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இதை அதிக அளவில் குடிப்பதன் மூலம் கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கும் நரம்பு தளர்ச்சி ஏற்படும். எனவே மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் இதுபோன்ற இருமல் சிரப்பு மருந்துகள் வெளி நபர்கள் விற்பனை செய்யக்கூடாது. அப்படி விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். அதை மீறி விற்பனை செய்யும் மருந்துகடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரோனா நோய் விலைமதிப்பற்ற மனித உயிர்களை பறித்து வருகிறது. அதிலிருந்து தப்பிக்க வழிதேடும் மக்கள் ஒரு பக்கம், போதை காரணமாக தங்கள் இறப்பை தாங்களே தேடிச்செல்லும் மது அருந்துவோர்கள் மறுபக்கம்.