கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சியை அடுத்த அய்யம்பாளையத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் செயல்படுகிறது. இந்தக் காகித ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கெமிக்கல் கழிவு நீரால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கெமிக்கல் கழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வைத்து வருகிறார்கள்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 7ஆம் தேதி மாலை அங்கு வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆலை நிர்வாக அலுவலர்கள், விவசாயிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விவசாயிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆலை நிர்வாகத்தின் மீது கூறினார்கள்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழ்நாடு காகித ஆலை எனப்படும் டி.என்.பி.எல் நிறுவனம் அதன் கழிவு நீரை விவசாய பாசனத்திற்காகச் செல்லும் வாய்க்காலில் கலந்துள்ளார்கள். ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ஓடை வழியாக புகழுர் வாய்க்காலிலும் கலப்பதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளார்கள்.
விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் டி.என்.பி.எல் நிர்வாகத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளால் பயிர்கள் நாசமடைந்துள்ளன. இது தொடர்பாக அரசுக்கு விவசாயிகள் மனு கொடுத்ததின் பேரில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆலை நிர்வாகம் தொடர்ந்து கழிவு நீரை வெளியேற்றுவதால் அது புகழூர், நெரூர், வாங்கல் வாய்க்கால்களில் கலந்து செல்கிறது. இந்தக் கழிவு நீர், காவிரி ஆற்றில் கலக்கும் வரை அப்பகுதி நிலங்கள் கெட்டுப்போய் உள்ளன. நீதிமன்றத்தின் உத்தரவை டி.என்.பி.எல் நிறுவனம் முறையாகக் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் பழைய பஸ் பாஸே செல்லும். கரோனோ காலகட்டம் என்பதால் புதிதாக பஸ் பாஸ் தயார் செய்யப்படவில்லை. மாணவர்கள் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்குமாறு நடத்துநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் இப்போது அமராவதி ஆற்றில் 17,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் டவுனில் 2,000 கன அடி தண்ணீர் தற்போது கடந்து சென்று கொண்டிருக்கிறது.
உபநதிகளான குதிரையாறு, பாலாறு, பெருந்தலாறு, வரதமாநதி உள்ளிட்ட ஆறுகள் மற்றும் மழை நீருடன் சேர்ந்து 17,000 கன அடி நீர் 8ஆம் தேதியிலிருந்து வரும் என்பதால் கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். கரூர் மாவட்டத்தில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளூர் தேவைக்கு மணல் அள்ள அரசிடம் அனுமதி கேட்டுள்ளார்கள். அதை பரிசீலனை செய்து மணல் அள்ள ஐந்து இடங்களைக் கண்டறிந்து அரசுக்கும், முதல்வருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்றம், வழக்கு தொடர்ந்தவரை எச்சரித்ததுடன் அந்த மனுவினை நிராகரித்துள்ளது. மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக மிக விரைவில் மணல் அள்ள அனுமதி பெற்றுத் தரப்படும்.” என்றார்.