சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதி ரீதியாக இடம்பெற்றிருந்த கேள்வி சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாற்றுத்துறை இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்வியில் 4 ஆப்ஷன்களாக சாதிப் பெயர்கள் கொடுக்கப்பட்டு அதில் எந்த சாதி தாழ்த்தப்பட்ட சாதி என இடம் பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் சாதி ஒழிக்க போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சாதி பற்றிய கேள்வியா? என பல்வேறு தரப்பினர் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் விவரம் கேட்டபோது, ''நேற்று நடைபெற்ற இந்த தேர்வில் கேட்கப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய வினாவானது பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அப்பாற்பட்ட பேராசிரியர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வினாத்தாள் என்பதால் மாணவர்கள் கைகளுக்கு வினாத்தாள் சென்ற பிறகுதான் இது தொடர்பான விவரங்கள் எங்களுக்கே தெரிய வந்தது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வினாத்தாள் குழுவின் தலைவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என துணைவேந்தர் ஜெகநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாற்றுத்துறை இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு வினாத்தாளில் சாதி குறித்து கேள்வி கேட்டது குறித்து ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர் கல்வித்துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைத்து விசாரணை நடத்தி, அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.