தொடரும் மத்திய பாஜக மோடி அரசின் ”நீட்” பயங்கரவாதம். தமிழக மாணவர்கள் இந்த ஆண்டும் அதற்கு பலியான கொடூரம். இதில் நம்மைத் தாக்கி அழிக்கும் எதிரியை என்ன சொல்ல? எதிரிக்கே துணைபோய் நமக்கு இரண்டகம் செய்த அதிமுக அரசுதான் இதில் குற்றவாளி என குற்றஞ்சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
எடுத்த எடுப்பிலேயே கடந்த ஆண்டு அரியலூர் மாவட்ட மாணவி அனிதாவைக் கொலை செய்துதான் தமிழகத்தில் நிலைகொண்டது நீட் மருத்துவ நுழைவுத் தோ்வு. இந்த ஆண்டும் அதன் கொலைக் கரம் நீளாமல் இல்லை. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த பெருவலூர் பகுதி மாணவி பிதீபாவை நீட் பலிகொண்டுள்ளது.
ஒரு கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா, ப்ளஸ் 2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அப்படியிருந்தும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. இந்த விரக்தி அவரைத் தற்கொலைக்குத் தூண்டியது. எலி மருந்துக்கு இரையானார். நீட்டின் கொடுங்கரம் பிரதீபாவோடு மட்டும் நிற்கவில்லை.
கடலூர் உண்ணாமலை செட்டி சாவடி பகுதியைச் சேர்ந்த மாணவர் அருண்பிரசாத்தையும் பலிகொண்டிருக்கிறது. அருண்பிரசாத் கடந்த 2016-17ஆம் கல்வியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஒரு பள்ளியில் படித்து ப்ளஸ் 2 வில் 1150 மதிப்பெண் எடுத்து நீட் தேர்வு எழுதித் தோல்வி அடைந்தார். அதனால் சென்னையில் ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து இந்த ஆண்டு மீண்டும் நீட் எழுதினார். நேற்று முன்தினம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட நீட் தேர்வு விடைக் குறிப்பைப் பார்த்தபோது தான் எழுதிய விடைகளுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதைக் கண்டார். இந்த முறையும் தோல்விதான் என்ற வேதனையில், வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நீட் தேர்வு, நம்மை அழிப்பதற்கென்றே மோடியால் ஏவப்பட்ட பயங்கரவாதம் என்பதை தேர்வு முடிவுகளே தெளிவுபடுத்துகின்றன. தமிழகத்தில் இந்த ஆண்டு 1,14,602 பேர் நீட் தேர்வு எழுதி, 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 39.55 விழுக்காடு தேர்ச்சி. இந்திய அளவில் இது 35ஆவது இடம்; அதாவது கடைசி இடம். இந்திய அளவில் நீட் தேர்ச்சி 56 விழுக்காடு. இதில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடம், 74 விழுக்காடு; அடுத்து டெல்லி 74 விழுக்காடு, அரியானா 73 விழுக்காடு.
இப்படி கல்வி அறிவில் கடைகோடியில் இருந்த மாநிலங்கள் முதலிடத்திற்கு வந்த தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது எப்படி? அதற்காகத்தானே நீட்! இது படித்து எடுத்த மதிப்பெண்களால் அல்ல; போட்டுக் கொடுத்த மதிப்பெண்களால்! மோசடி! இதைத்தான் மோடி அரசு செய்துகொண்டிருக்கிறது. அதனால்தான் சிபிஎஸ்இயால் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வின் முதன்மைக் குறிக்கோள் கல்வித் துறையினின்றும் தமிழகத்தை அப்புறப்படுத்துவதுதான். எனவே தான் சொல்கிறோம், தொடர்கிறது மத்திய பாஜக மோடி அரசின் ”நீட்” பயங்கரவாதம் என்று. அதற்கு இந்த ஆண்டும் தமிழக மாணவர்கள் பலியாகியிருப்பதே சான்று.
இதில் நம்மைத் தாக்கி அழிக்கும் எதிரியை என்ன சொல்ல? எதிரிக்கே துணைபோய் நமக்கு இரண்டகம் செய்த அதிமுக அரசுதான் இதில் குற்றவாளி என குற்றஞ்சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.