
சிறப்பு கவனம் செலுத்தி பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து சிவகங்கை நகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தெப்பக்குளத்தை நிரப்பிட நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் சிவகங்கை நகர மக்கள்.
" மாவட்டத் தலைநகரமான சிவகங்கை நகரின் மையத்தில் அமைந்துள்ள தெப்பக்குளம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. தெப்பக்குளம் சுத்தம் செய்யப்பட்டு விளையாட்டு மைதானம் போல இருக்கிறது. தென்மேற்கு பருவமழையால் பெரியாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவு நிரம்பியுள்ளதால், பெரியாறு அணையின் விஸ்தரிப்பு கால்வாய்கள் மதுரை சிவகங்கை மாவட்ட எல்லையான குறிச்சி பட்டி வரை உள்ளன. அங்கிருந்து இடையமேலூர் வழியாக கால்வாய் மூலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள செட்டியூரணியை நிரப்பி அங்கிருந்து தெப்பக்குளத்தை நிரப்ப முடியும். கடந்த1996-97 நிதியாண்டில் வேளாண்மை பொறியியல் துறையினரால் தெப்பக்குளம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 20-10-1996ல் பணிகள் நிறைவடைந்தது.
பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு 30-10-1996ல் தெப்பக்குளம் நிரப்பப்பட்டது. அப்போது சிவகங்கை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த முன்னாள் அமைச்சர் திரு. தா.கிருஷ்ணன் அவர்களும், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. க.சண்முகம் (தற்போது தமிழக அரசின் நிதித்துறை செயலர்) அவர்களும் சிறப்பு கவனம் செலுத்தி அக்கறையுடன் எடுத்த முயற்சிகளே இதற்கு காரணம். எனவே சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்கள் சிறப்புக் கவனம் செலுத்தி அக்கறையுடன் நடவடிக்கைகள் எடுத்து பெரியாறு அணையிலிருந்து தண்ணீரைக் கொண்டு வந்து தெப்பக்குளத்தை நிரப்பிட ஆவண செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்." என பொது மக்கள் சார்பாக, முன்னாள் நகர்மன்றத் தலைவர் அர்ச்சுனனால் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.