
பேரறிவாளன் விடுதலையை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாயில் வெள்ளைத் துணியை கட்டிக்கொண்டு, ’வன்முறைக்கு கொலை தீர்வாகாது’ என்று கோஷங்களை எழுப்பியவாறு 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு தீர்பளித்து உத்தரவிட்டது. மேலும், ஆளுநர் 161வது பிரிவில் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால் 142 சட்டப்பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்வதாக உத்தரவிட்டது.
பேரறிவாளன் விடுதலையை பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று வரும் நிலையில், பேரறிவாளன் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலையை கண்டித்து வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு அறப்போராட்டம் நடத்த கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கரூர் பேருந்து நிலையம் அருகில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வடக்கு மாநகரத் தலைவர் கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு, மத்திய மாநகர தலைவர் பெரியசாமி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், வன்முறைக்கு கொலை தீர்வாகாது என்றும் கோஷங்களை எழுப்பினர்.