
கள்ளக்குறிச்சி நகரில் உள்ள காந்திரோடு பகுதியில் வசித்து வருபவர் சீதாபதி. இவரது மனைவி ராஜலட்சுமி(63). இவருக்கு உடல் வலி, கை-கால் வலி இருந்து வந்துள்ளது. இதற்காக இவர் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். அப்படி இருந்தும் அவருக்கு கை-கால் வலி குறையவில்லை இதை அக்கம்பக்கத்தினரிடம் அவ்வப்போது கூறி புலம்பிக் கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு அடையாளம் தெரியாத மந்திரவாதி நபர் ஒருவர் வந்துள்ளார்.
அவர் ராஜலட்சுமியிடம் உங்களுக்கு தீராத கை-கால் வலி இருப்பதாகவும் அதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியதோடு உங்கள் கணவர் தான் என்னை அனுப்பி வைத்துள்ளார் என்றும் கூறியுள்ளார். அதை உண்மை என்று நம்பிய ராஜலட்சுமி அந்த மந்திரவாதியை வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். வீட்டின் பூஜை அறை முன்பு மந்திரவாதியை அமரவைத்துள்ளார். அப்போது மந்திரவாதி பூஜைக்கு தேவையான சாமான்களை சேகரித்து எடுத்துக்கொண்டு வருமாறு கூறியுள்ளார். பூஜை செய்யும்போது அதில் தங்க நகை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். உடனே ராஜலட்சுமி தன் கழுத்தில் இருந்த மூன்று தங்கச் செயின்களை கழற்றி கொடுத்துள்ளார்.
11 சவரன் தங்கச் செயின்களை வாங்கிய மந்திரவாதி பூஜை செய்ய வைத்திருந்த தண்ணீர் சொம்புக்குள் போட்டு விட்டு ஓம்,க்ரீம்,க்ரீம் என்று ராஜலட்சுமிக்கு புரியாத பாஷையில் ஏதேதோ மந்திரங்களை சொல்லி பூஜை செய்துள்ளார். ராஜலட்சுமி மிகவும் பவ்யமாக அமர்ந்து கொண்டார். பூஜை முடிந்ததும் விபூதி பிரசாதம் வாங்குவதற்காக ராஜலட்சுமியை குளியலறைக்கு சென்று கை கால்களை கழுவி சுத்தம் செய்துகொண்டு வருமாறு கூறியுள்ளார். ராஜலட்சுமியும் அந்த மந்திரவாதி கூறியபடி கை, கால்களை கழுவி கொண்டிருக்கும் போதே அந்த மந்திரவாதி ராஜலட்சுமியை உள்ளே வைத்து குளியலறை கதவை வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு ராஜலட்சுமி கழற்றி கொடுத்த நகையை எடுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தலைமறைவாகிவிட்டார்.
கைகால்களை சுத்தம் செய்துகொண்டு குளியலறை கதவை திறக்க ராஜலட்சுமி முயற்சி செய்யும்போது கதவு வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே குளியலறையிலிருந்து கத்தி கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்து பாத்ரூம் கதவை திறக்க செய்துள்ளார். அதன் பிறகே தனது நகையை அந்த போலி மந்திரவாதி பறித்துச் சென்றது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து ராஜலட்சுமி கள்ளக்குறிச்சி காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இவரது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தண்டாயுதபாணி மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கை-கால் வலிக்கு மந்திரம் போடுவதாக கூறி நகை பரித்து சென்ற போலி மந்திரவாதியை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த நூதன கொள்ளை சம்பவம் கள்ளக்குறிச்சி நகர மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.