சேலத்தில், பொதுவெளிகளில் முகக்கவசம் அணியாமல் கரோனா பரப்பும் வகையில் அலட்சியமாக செயல்பட்ட நபர்களிடம் இருந்து 24 நாள்களில் 19.94 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று கிராமப்புறங்களை காட்டிலும், மக்கள் அடர்த்தி மிகுந்த மாநகர பகுதிகளில் வேகமாக பரவுகிறது. நோய்த்தொற்றில் இருந்து காத்துக்கொள்ள பொது வெளிகளில் செல்லும்போது முகக்கவசம் (மாஸ்க்) அணிவது கட்டாயம் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனினும், பலர் பொதுவெளிகளில் முகக்கவசம் அணியாமல் செல்வதும், மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுத்தும் வகையில் அலட்சியமாக செயல்படுவதும் தொடர்ந்தது. இதையடுத்து, முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது வெளிகளிலும், நிறுவனங்களிலும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் இருந்த நபர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த செப். 14- ஆம் தேதி முதல் அக். 7- ஆம் தேதி வரையிலான 24 நாள்களில் மட்டும் 19 லட்சத்து 94 ஆயிரத்து 880 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12,725 பேரிடம் இருந்து இந்த அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பொது வெளிகளில் செல்லும்போதும், பணியிடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பது கடந்த ஏப்ரல் 16- ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய நான்கு மண்டலங்களிலும் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கரோனா நோய்த்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள், விதிகளை மீறி செயல்பட்டால் 500 ரூபாயும், பொதுவெளிகளில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு 200 ரூபாயும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாயும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்களுக்கு 500 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி செயல்படுவோருக்கு 500 ரூபாயும், கடைகள், வணிக நிறுவனங்கள், வாகன ஓட்டிகளுக்கு 5,000 ரூபாயும் அபராத தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாநகர பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் தீவிர தொற்று நோய்த்தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.