Skip to main content

பனை ஓலையில் படையலிட்டு பனை மரத்துக்கு மரியாதை...!!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

அரியலூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சியின் பெருமையாக ஓங்கி வளர்ந்துள்ள பல ஆயிரக்கணக்கான பனை மரங்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பனையை போற்ற வேண்டிய அவசியம் குறித்து வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் கூறுகையில், பனை மரம் வெறும் மரம் மட்டுமல்ல. பனை மரம் அடி முதல் நுனி வரை ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் ஜீவராசிகளுக்கும் நிலத்தடி நீரை உயர்த்துவது முதல் பனை பல வகையான பொருட்களாக கொடுத்து உதவுகிறது.
 

  Paying homage to the palm tree ...

 

பனை மரத்தின் நன்மைகளாக சிலவற்றை கூறலாம், அதாவது பனை மரம் அளவுக்கதிகமான வெப்பம், மழை, காற்று, வெள்ளம் இவற்றை தாங்கி வளரக் கூடியது. ஓர் இடத்தில் பனை மரம் சாகிறது என்று சொன்னால் மனித குலம் பேரழிவை சந்திக்க உள்ளது என்று பொருள். பூமிக்கு வரவுள்ள ஆபத்தை தடுக்கவல்ல பனையை வளர்க்க வேண்டிய காலகட்டம் இது.

 

  Paying homage to the palm tree ...


பனை மரம் மூலம் கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்... பனை ஓலை விசிறி பயன்படுத்த குளிர்ந்த காற்று வரும், பனை வெல்லம் பயன்படுத்த பெண்களுக்கு ஏற்படும் இரத்தச் சோகை சரியாகும், பனங்கற்கண்டு பயன்படுத்த உடல் குளிர்ச்சி பெறும், வெயில் காலங்களில் நுங்கு சாப்பிடுவதால் தாகம் அடங்கும், உடல் புத்துணர்ச்சி பெறும், வியர்க்குருவை போக்க நுங்கு நீரைத் தடவ உடல் வெப்பம் தணிந்து விடும், பனங்கள், பத நீர், மனித உடலில் எலும்புகளை வலுப்படுத்தும், நார்ச் சத்துமிக்க பனங்கிழங்கு முதலியவற்றை தருவதோடு அதிகப்படியான காற்று வீசும்போது மனித உயிரை சூறைக்காற்றிலிருந்து தடுக்க வல்ல பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது. 

 

  Paying homage to the palm tree ...


பனை மழை அறிகுறிகளை கூடுகளை கட்டி வாழும் தூக்கணாங்குருவிகளின் அடைக்கலமாகவும் உள்ளது. ஐயன் திருவள்ளுவன் திருக்குறளை ஓலைச் சுவடிகளில் எழுதி வைக்க நமது தொன்மையான வரலாற்று ஆவணங்களை வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்ட உறுதுணையாகவும் இருந்துள்ளது. பனை மரத்தினைக் கொண்டு வீடு கட்டும் விதமாக விட்டம், ஓடு வீடுகள், அலங்காரப் பொருட்கள் தயாரிக்கவும், மிக குறைந்த விலையில் அமருவதற்கு உண்டான நாற்காலிகள், முக்காலிகள், வட்ட வடிவ மேசை உள்ளிட்ட பல்வேறு மரச் சாமான்களை செய்ய முடியும். இதன் மூலம் பனை எத்தகைய முக்கியத்துவமான ஒன்று என அறியலாம்.

 

  Paying homage to the palm tree ...


தமிழகத்தின் மாநில மரமாக விளங்கிய பனை மரத்திற்கு மரியாதை செலுத்துவதோடு பனை பொருட்களை பயன்படுத்தி ஏழை எளிய மக்கள் தங்களது செலவினை பிளாஷ்டிக் பொருட்களை வாங்கி குவிப்பதை தடுக்க இயலும். எனவே மாணவர்கள் அனைவரும் அதிக நன்மையைத் தரும் பனை மரத்தை பனை பொருட்களை தரும் பனையை காக்க முன் வர வேண்டும். பனை மரங்களை அதிகளவில் நீர் நிலைகள் அருகே வயல்வெளிகளில் வரப்பு ஓரமாக நடுவதற்கு முன் வர வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும். பனை பேரிடரிலிருந்து காக்க உதவும். இவ்வளவு நன்மை தரும் மரத்தை அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் திருமழபாடி வைத்தியநாத ஸ்வாமி கோவிலில் தல விருட்சமாக பனை மரத்தை வைத்துள்ளார்கள் என்பது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று. எனவே பனை மரங்களை தேவையில்லாமல் அழிக்க கூடாது. மரங்களை வெட்டி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். பனை மர இருக்கைகளை பயன்படுத்தலாம் இதனால் சுற்றுப் புறச் சூழல் மிகவும் பாதுகாக்கப்படும்.

 

  Paying homage to the palm tree ...

 

பிளாஷ்டிக் பொருட்களின் பயன்பாடுகள் குறைந்து விடும். பலருக்கும் வேலைவாய்ப்பினை அள்ளித் தரும் பனை மரத் தொழிலை ஊக்குவிக்க பனையை போற்றுவோம். பனை தொழில் கூடம் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

  Paying homage to the palm tree ...


இந்நிகழ்ச்சியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் 7000 பனை மரங்களை வைத்த மறைந்த முன்னாள் ரெட்டிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரும், இயற்கை ஆர்வலருமான கலியபெருமாள் அவர்கள் மகன் 63 வயதான இராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சமூக ஆர்வலர் மாரியம்மாள், தமிழ்க்களம் இளவரசன், தமிழ்க்காடு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், இயற்கை நலம் ஒருங்கிணைப்பாளர் பாலு, இயற்கை ஆர்வலர் ராஜா, நம்மாழ்வார் இயற்கை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தம்பிதுரை, செட்டித்திருக்கோணம் நண்பர்கள் சமூக நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜா, மரங்களின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குமிழியம் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 



 

சார்ந்த செய்திகள்