Skip to main content

தமிழில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கொத்தனார் மகன்

Published on 07/06/2018 | Edited on 07/06/2018

நீட் ஒரு பக்கம் உயிர் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாணவர்கள் தேர்ச்சியும் பெற்றுள்ள நிலையில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மருத்துவ கனவை நிறைவேற்ற கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள பள்ளவராயன்பத்தை கிராமம் ஆதிதிராவிடர் காலனி. மருத்துவர்களே உருவாகாத தெரு முதல் முறையாக மருத்துவக் கனவேடு படித்து 198 கட் ஆப் எடுத்த மாணவன் கவியரசனுக்கு இடியாய் இறங்கியது நீட். கால்நடை மருத்துவர்க்கும் அக்ரிக்கும் இடம் கிடைத்த நிலையில் இரண்டையும் உதறிவிட்டு மருத்துவர் ஆவதே லட்சியம் என்ற மாணவன் தான் ஓராண்டு காத்திருந்து எழுதிய நீட் தேர்வில்  331 மதிப்பெண்கள் பெற்று கனவு நிறைவேறும் என்று காத்திருக்கிறார். கவி டாக்டர் ஆவார் என்று அந்த குடும்பம் மட்டுமின்றி அந்த தெருவே மகிழ்ச்சியில் உள்ளது. 

 

இந்த நிலையில் தான் பள்ளவராயன்பத்தையில் உள்ள கவியரசனின் வீட்டுக்குச் சென்றோம். ஓட்டு வீட்டு வாசலில் கயிற்றுக்கட்டிலில் இருந்த கவியரசன் அவரது அப்பா கொத்தனார் நடராஜன் அம்மா கலைச்செல்வி ஆகியோர் வரவேற்றனர்.
 

அப்போது கவியரசன் நம்மிடம், 5 ம் வகுப்பு வரை உள்ளூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்தேன். 5 ம் வகுப்பு இறுதியில் நடந்த திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றதால் அரசு செலவில் தனியார் பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைத்ததால் பட்டுக்கோட்டை லாரல் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பில் 497 மார்க் வாங்கி தொடர்ந்து அதே பள்ளியில் +2 படித்து 1168 மதிப்பெண் வாங்கினேன். மருத்துவ கட் ஆப் 198 இருந்ததால் பொதுப் போட்டியிலேயே இடம் கிடைக்கும் என்றிருந்த போது தான் நீட் கட்டாயமாக்கப்பட்டது. அதனால் எனக்கு போன வருசம் நீட் சரியா எழுத முடியல ஆனால் அக்ரியும் கால்நடை மருத்துர்க்கும் இடம் கிடைத்து கால்நடை மருத்துவம் படிக்க போய் கொஞ்ச நாளில் நீட் எழுதி மருத்துவர் ஆகிறேன்னு வந்துட்டேன். பிறகு தான் திருச்சியில் சீசர்ஸ் கோச்சிங் சென்டரில் இலவச கோச்சிங்க்காக ராமகிருஷ்ணா அறக்கட்டளை அனைத்து உதவிகளையும் செய்தது. +2 வரை தமிழ் வழியிலேயே படித்த எனக்கு முதலில் தடுமாற்றமாக இருந்தாலும் சரி செய்து கொண்டேன். அதே போல நீட் தேர்விலும் ஆங்கிலம் என்னை தினற வைத்தது. இருந்தாலும் சமாளித்து எழுதினேன். இப்ப 331 மதிப்பெண் கிடைத்துள்ளது. அதனால் எனக்கு என் கனவை நினைவாக்கும் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இனி தான் விண்ணப்பிக்கனும் என்றார்.

 

அருகில் இருந்த பெற்றோர்.. இது வரை அவனது சொந்த முயற்சியில் படித்தான். இனியும் அன் விரும்பிய படிப்பு படிக்க தேர்ச்சியும் பெற்றுள்ளான். இடம் கிடைத்தால் ரொம்ப மகிழ்ச்சி. நீட் இல்லாமல் இருந்திருந்தால் போன வருசமே படிப்பை தொடங்கியிருப்பான். இந்த நீட்டால் ஒரு வருடம் எங்கள் மகன் படிப்பு பாழாகிவிட்டது. அவனுக்கு இடம் கிடைத்து எங்கள் தெருவின் முதல் டாக்டர் என்ற பெயரை எடுக்கனும் என்றனர். நீட் ஏமாற்றங்களில் இருந்து தப்பிய தம்பி கவிக்கு இடம் கிடைத்து கனவு நிறைவே வாழ்த்துகள் சொல்லி வந்தோம்.

 

சார்ந்த செய்திகள்