திருச்சி திருவானைக்காவல் மீண்டும் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவானைக்காவல் பகுதியில் இருந்து திருவரங்கம் செல்லும் சாலையான காந்தி ரோடு திருப்பத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் இன்று அதிகாலை நடுரோட்டில் திடீரென்று பள்ளம் விழுந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பள்ளம் வெகு ஆழமாக இருந்ததால் உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பள்ளத்தை சுற்றி தடுப்புகளை வைத்தனர். இதனால் கனரக வாகனங்கள் பேருந்துகள் இப்பகுதியில் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளம் விழுந்த பகுதியை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டிப் பார்த்தபோது கழிவுநீர் செல்லும் பெரிய குழாய் உடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அதிலிருந்து வெளியேறும் அதிக அழுத்த நீரோட்டத்தால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தை சுற்றிலும் அகலப்படுத்தி மீண்டும் புதிய கழிவுநீர் குழாய் பதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் திருவரங்கம் செல்லும் அனைத்து பேருந்துகளும் மாம்பழச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டு அம்மா மண்டபம் வழியாக சென்று வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகள் நிறைவடைய இரண்டு நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பள்ளம் விழுந்த இடத்திற்கு சற்று தொலைவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுபோன்ற பள்ளம் 2 முறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதை சரி செய்ய மூன்று நாட்கள் ஆனது. இதனால் திருவானைக்காவல் பகுதியில் இருந்து திருவரங்கம் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவர்கள் மாம்பழச்சாலை சென்று அங்கிருந்து திருவரங்கம் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.தற்போது பள்ளம் உள்ள இடத்தில் இருபுறமும் தடுப்புகள் வைக்கப்பட்டதால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.