சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறைத் தண்டனை விதித்து, கடந்த, 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா தற்போது தண்டனை காலத்தை நிறைவு செய்துள்ளார். கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது மருத்துவமனையில் இருந்து பெங்களூர் புறநகரில் இருக்கும் தனியார் விடுதிக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சசிகலாவை கர்நாடகாவைச் சேர்ந்த அதிமுக செயலாளர் யுவராஜ் நேரில் சந்திக்கச் சென்றதாக தகவல் வெளியாகியது. கரோனா தனிமைப்படுத்தலில் சசிகலா இருப்பதால் அவரை யுவராஜ் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவரை சந்திக்கச் சென்றது உறுதியானால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.