சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் பால் உற்பத்தி மற்றும் பால் கொள்முதல் அதிகரிக்க பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் கடந்த 20 ஆம் தேதி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வாரியாக பால் உற்பத்தி மற்றும் பால் கொள்முதலை அதிகரித்தல், பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரித்தல், அனைத்து ஒன்றியங்கள் மற்றும் இணையத்திலுள்ள பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடு, முந்தைய ஆய்வுக்கூட்டங்களில் வழங்கிய உத்தரவுகள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து மேலும் மேம்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஆவின் விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படும் பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் பொருட்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி 1 கிலோ பன்னீர் 450 ரூபாயில் இருந்து 550 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரை கிலோ பன்னீர் 250 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்ந்துள்ளது. 200 கிராம் பன்னீர் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போன்று 200 கிராம் பாதாம் மிக்ஸ் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக உயர்ந்துள்ளது.