அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ளது ஸ்ரீபுரந்தான். இந்த கிராமத்தில்தான் அந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மன்ற அலுவலகத்தில் கிராம வளர்ச்சி பணிகள் குறித்து கூட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். திடீரென்று திரண்டு சென்ற ஊர் மக்கள் தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்களை உள்ளே வைத்து பூட்டி விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த தகவலை அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டிருந்த கிராம மக்களிடம் விசாரித்தபோது, டாஸ்மாக் மதுபானங்களை எங்கள் ஊரில் கள்ள மார்க்கெட்டில் அமோகமாக விற்பனை செய்து வருகிறார்கள். அதை வாங்கி குடிப்பதற்காக சாத்தம்பாடி உட்பட பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் எங்கள் ஊருக்கு படையெடுக்கிறார்கள். இதனால் குடிமகன்கள் தொல்லை தாங்க முடியவில்லை.
கள்ள மதுபான விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரி ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை எடுத்து கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டினோம் என்றனர்.
இதையடுத்து விக்கிரமங்கலம் போலீசார் மதுபான விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பூட்டப்பட்ட பூட்டை திறந்து விட்டனர். ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்களை அலுவலகத்தின் உள்ளே வைத்து வெளியே பூட்டு போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.