Skip to main content

மழையில் நனைந்து பாழாகும் நெல்... விவசாயிகள் வேதனை!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

paady thiruvarur farmers

 

அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், இருபது நாட்களுக்கு மேலாக விவசாயிகள் கொண்டுவந்த நெல்லை கொள்முதல் செய்யாததால், நெல் முழுவதும் முளைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
 

திருவாருர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தாலுக்காவிற்கு உட்பட்ட கிராமங்களில் குறுவை சாகுபடி செய்து அறுவடை பணிகள் நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை, கொள்முதல் செய்வதற்காக நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், 20 நாட்களுக்கு மேலாகக் கொட்டி வைத்துக் காத்திருக்கும் அவலமே நீடித்துவருகிறது. தொடர்ந்து பெய்த மழையில் நனைந்த நெல்மணிகளை வெயிலில் உலர்த்தும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 
 

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "ஒரு நாளைக்கு 1,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் கொள்முதல் நிலையங்களிலோ 400 முதல் 700 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுன்றது" என்கிறார்கள்.
 

மேலும், விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொட்டி காயவைக்க போதுமான இடம் இல்லாமல், சாலையில் கொட்டி வைத்து பாதுகாத்துவருவதோடு, சாலையில் காயவைப்பதால் வாகனங்களில் அடிபட்டுச் சேதமடைகிறது. பின்னர் அந்த நெல்லை குவித்துத் தார்ப்பாயைக் கொண்டு மூடி பாதுகாத்தாலும், தற்போது பெய்துவரும் குளிர்பனியால் நெல் மணிகள் முற்றிலும் முளைத்துவிட்டது என்று கவலையோடு தெரிவிக்கின்றனர். 

 

இதுகுறித்து விவசாய சங்கப் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், "கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை கொண்டுவந்து 15 நாட்களுக்கு மேலாகிவிட்டது. கொட்டி மூடிய நெல் முழுவதும் முளைக்க துவங்கிவிட்டது. அதோடு நெல் முழுவதும் சாம்பல் நிறமாக மாறிவிட்டது. கொள்முதல் நிலையங்களில் டோக்கன் கொடுத்து இரண்டு  நாட்களில் நெல்லை  கொள்முதல் செய்வதாக அமைச்சர் காமராஜ் கூறி வருகிறார். ஆனால் எந்த நிலையத்திலும் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை முறையாக ஒருவாரத்திற்குள் கொள்முதல் செய்துவிடுகின்றனரா என்றால் இல்லை. விவசாயிகளின் அவலம் முதலமைச்சர் பார்வைக்குப் போகுதா இல்லையா எனத் தெரியவில்லை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழைகத்தைக் கட்டாயம் ஒழுங்குப்படுத்த வேண்டும். இல்லையெனில், சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஒன்று திரட்டி தலைமைச் செயலகம்  முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்." என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்