Skip to main content

முதல்வர் மீதுள்ள வழக்குகள் தொடர்பாக 17ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்....

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

An order will be issued on the 17th regarding the cases against the Chief Minister

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த 16 கிரிமினல் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக வரும் 17ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2011 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு, வாக்கிடாக்கி கொள்முதல்  உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்த அப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

 

அரசுக்கு எதிராகவும், முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறியதாக 16 கிரிமினல் அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்பில் ஸ்டாலினுக்கு எதிராகத் தொடரப்பட்டது.இந்த நிலையில் அண்மையில் பொறுப்பேற்ற திமுக அரசு, கடந்த ஆட்சியில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகத்  தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்.பி, எம்.எல்.ஏ-களுக்கு எதிரான குற்ற வழக்குகளைத் திரும்ப பெறும் முன்னர் சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

 

அந்த உத்தரவின் அடிப்படையில் ஸ்டாலினுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகளைத் திரும்பப்பெற தமிழக அரசின் சார்பில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாகவும் 16 வழக்குகளை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நிலுவையில் உள்ள 16 கிரிமினல் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற அனுமதிப்பது தொடர்பான மனு மீது வரும் 17ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்து வழக்கைத் தள்ளிவைத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்