Skip to main content

நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர்களின் அனல் பறக்கும் விவாதம்! 

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

OPS, EPS in court. Fiery discussion of lawyers!

 

வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (08/07/2022) பிற்பகல் 02.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக, நீதிபதி நேற்று எழுப்பிய கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் அளிக்கப்பட்டு வருகிறது. 

 

எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள், அடுத்த பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல்கள் அ.தி.மு.க. அலுவலகத்தால் விநியோகிக்கப்பட்டவை. 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,190 பேர் ஜூலை 11 பொதுக்குழுவுக்கு சம்மதம் கூறியுள்ளனர். கடந்த பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் வழங்கப்படவில்லை" என்றனர். 

 

இதற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று அ.தி.மு.க.வின் விதிகளின் படி தானே முறைப்படி அறிவித்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். 

 

எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும் கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என்பதே கட்சியின் விதி. தலைமைக் கழக நிர்வாகிகள் பதவியில் நீடிக்கின்றனர் என்று வாதிட்டனர். 

 

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள், 2,432 பொதுக்குழு உறுப்பினர்கள், ஒற்றைத் தலைமை பற்றி ஜூலை 11- ஆம் தேதி அன்று விவாதித்து முடிவெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 

 

எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள், ஜூலை 11- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடைகோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இடையூறு இல்லாமல் பொதுக்குழு கூட அனுமதிக்க வேண்டும்; தடை விதிக்கக் கூடாது. கட்சிக்கு எதிராகவும், உச்சபட்ச அதிகாரமிக்க பொதுக்குழுவுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை. கட்சி விதிகளை திருத்த தொண்டர்களை பிரதிநிதித்துவப்படுத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம். கட்சி விதிகளைத் திருத்த செயற்குழுவுக்கு அதிகாரம் இல்லை. இருவரால் நியமிக்கப்பட்ட தலைமைக்கழக செயலாளர்கள் காலியிடம் நிரப்பப்படும் வரை செயல்படுவார்கள் என வாதிட்டனர். 

 

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள் மாறி மாறி தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்