சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. பரந்தூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்கள் விமான நிலையம் வேண்டாம் எனத் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அண்மையில் போராட்டக் குழுவுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தது.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் சுமார் 13 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவையில் பரந்தூர் விமான நிலைய வரைபடத்தில் ஏகனாபுரமும் வருகிறது என்று கூறியதற்கு எதிராக இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.