தமிழக சட்டப் பேரவையில் கடந்தாண்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'இந்திய அரசியலமைப்பு வழங்கக்கூடிய அதிகாரங்களுக்கு உட்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் செல்லுபடியாகக் கூடியது. பொது அமைதி, சுகாதாரம், சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் காரணமாக வேலையில்லா இளைஞர்கள், தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், போலீசார் என இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வாதத்தை முன் வைக்கையில், “இந்த வழக்கை ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடரவில்லை. ஆன்லைன் விளையாட்டை நடத்துபவர்கள் தான் வழக்கு தொடர்ந்துள்ளனர். கவர்ச்சி அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்கி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பணத்தை ஈட்டுகின்றனர். சிறார்கள் நலனைப் பாதுகாக்கவே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆன்லைனில் விளையாடுபவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாது. கிளப்களில் மாலை நேரங்களில் தான் ரம்மி விளையாட அனுமதிக்கப்படுகிறது. ஆன்லைனில் எப்போதும் விளையாட முடியும் என்பதால் இதை முறைப்படுத்த இயலாது” எனத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் வாதத்தை தொடர்ந்து வழக்கை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.